உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
ஆர்.மணி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்ற சொலவடை தமிழில் உண்டு. நம் அரசியல்வாதிகளை பொறுத்தவரையில், ஊருக்கு இளைத்தவன், ஹிந்து. தனி மனிதனோ, ஒரு அமைப்போ தவறிழைத்தால், அரசிடம் சென்று முறையிடலாம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம். அந்த தவறை, அரசே செய்யும் பொது, எங்கே சென்று முறையிடுவது? எந்த குட்டிச் சுவரில் முட்டிக் கொள்வது?
'சமத்துவம்' என்ற பெயரில் அரசும், அரசியல் கட்சிகளும் செய்யும் அலப்பறை கொஞ்ச நஞ்சமல்ல. ஆண்டுதோறும் தை மாதப் பிறப்பை, நாடு முழுதும் உள்ள ஹிந்து மக்கள், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல விதமான பெயர்களில் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில், தைப் பொங்கல்; ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில், மகர சங்கராந்தி; ஹரியானா, பஞ்சாப், அஸ்ஸாம், ஜம்மு -காஷ்மீர், ம.பி., - உ.பி., போன்ற மாநிலங்களில், லோஹ்ரி என்ற பெயரில், கொண்டாடி மகிழ்கின்றனர்.

பெயர் வேறு வேறாய் இருந்தாலும், நோக்கம் ஒன்று தான். அதாவது சூரியனை வழிபட்டு, நன்றி தெரிவிக்கும் விழா. இதில் அரசும், அரசியல் கட்சிகளும் வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்; அதை விடுத்து, கொண்டாட்டத்தில் மூக்கை நுழைத்து, குழப்பம் விளைவிக்கக் கூடாது. தமிழகத்தைத் தவிர, வேறு எந்த மாநிலத்திலும், மகர சங்கராந்தியிலும், லோஹ்ரியிலும் மூக்கை நுழைப்பதில்லை. தமிழகத்தில் மட்டும், அத்துமீறல் நடக்கிறது.
'சமத்துவப் பொங்கல்' என்ற பெயரில் அரங்கேறத் துவங்கியுள்ள இந்த கூத்தில், இதுவரை ஹிந்து கடவுளை விமர்சித்தவர்கள், தற்போது பண்டிகையிலும் மூக்கை நுழைத்து வருகின்றனர். இது தமிழர் பண்டிகை என, சிலர் கூறுவர். நாடு முழுதும் பின்பற்றப்படும் இவ்விழா, ஹிந்து மதத்திற்கு உரியது. சூரியனை, ஹிந்து தான் வணங்குவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
'சமத்துவப் பொங்கல்' கொண்டாடும் திராவிட அரசியல்வாதிகள் ஏன், 'சமத்துவ கிறிஸ்துமஸ், சமத்துவ ரம்ஜான்' எல்லாம் நடத்த முன்வருவதில்லை? அப்படி முயன்றால் அவர்களின், 'டங்குவார்' அறுந்து விடும். அதனால் தான், 'இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்' என்ற நினைப்பில், ஹிந்துக்களிடம் மட்டும் கை வரிசையை காட்டுகின்றனர். ஹிந்துக்களும் ஒருநாள் விழித்துக் கொள்வர். அந்த நாளில், திராவிடக் கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE