வாஷிங்டன் : ''ஜோ பைடன் நிர்வாகம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் சுலபமானதாக இருக்காது. இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவுடன், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்,'' என, அமெரிக்க துணை அதிபராக பதவியேற்க உள்ள, இந்தியாவை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவின், 46வது அதிபராக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், இன்று(ஜன.,20) பதவியேற்க உள்ளார். அவருடன், துணை அதிபராக, கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடிய, மார்டின் லூதர் கிங்கின் நினைவாக, ஜன., மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமை, தேசிய சமூக சேவை தினமாக அனுசரிக்கப்படும். அன்றைய தினம், மக்கள் சமூக சேவைகளில் ஈடுபடுவர்.

அவ்வாறு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, கமலா ஹாரிஸ் கூறியதாவது: நாட்டின் அதிபராகஜோ பைடன், பதவியேற்க உள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது, தடுப்பூசி வழங்குவது, பொருளாதாரத்தை மீட்பது என, மிக பெரும் சவால்கள் எங்கள் முன் உள்ளன. அவற்றை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
எங்கள் இலக்குகள், கடும் சவாலானது என்றாலும், மக்களின் ஒத்துழைப்பு, ஆதரவோடு, அவற்றை எதிர்கொள்வோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.சமீபத்தில் பார்லிமென்ட் வளாகத்தில் வன்முறை நடந்துள்ளது. எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மிகுந்த தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், பதவியேற்க தயாராக உள்ளோம்.
கடந்த, 1950 மற்றும் 1960களில், மார்ட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டங்களுக்கான தேவை, தற்போதும் உள்ளது வேதனை அளிக்கிறது. மக்களின் ஆதரவோடு, அனைத்து பிரச்னைகளையும், சவால்களையும் முறியடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE