புதுடில்லி: காங்., முன்னாள் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா, 2014-ல் காங்., 44 தொகுதிகளுடன் தோற்றதை, இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்ட் டெஸ்ட்டில் 36 ரன்களுடன் தோற்று தற்போது கோப்பை வென்றிருப்பதுடன் ஒப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சஞ்சய் ஜா. மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இவர், சில மாதங்களுக்கு முன் கட்சி குறித்து விமர்சித்தார். கட்சியில் அசாதாரண மந்தநிலை மற்றும் குழப்பம் நிலவுகிறது. இதை உணர முடியாத தலைவர்கள் பொறுப்புகளில் உள்ளனர் என்றார். இதன் காரணமாக அவரது செய்தித் தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர் காங்கிரஸை விட்டு விலகவில்லை.

இந்நிலையில் காங்.,ன் தோல்வியை அவர் இன்று வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியுடன் ஒப்பிட்டுள்ளார். “முதல் டெஸ்டில் இந்தியா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின் மாயாஜால கதை போன்று மீண்டு வந்தது. இதில் எனது பழம்பெரும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உத்வேகமளிக்கும் செய்தி உள்ளது. நாம் 44 இடங்கள் பெற்றுள்ளோம். அழுக்குகளையும், தூசியையும் உதறிவிட்டு எழுந்திரியுங்கள், போராடுங்கள். கடந்த காலத்தை நினைத்து அழுவதையும், சோர்வுறுவதையும் நிறுத்துங்கள்.” என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE