வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள, ஜோ பைடன், சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாமல் குடியிருப்போருக்கு, எட்டு ஆண்டுகள் குடியுரிமை வழங்கும் மசோதாவை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஜோ பைடன், 'அதிகாரப்பூர்வமற்ற முறையில் குடியிருப்போருக்கு, குறிப்பாக லத்தீன் அமெரிக்கர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, இன்று அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்ற பின், அனுமதியின்றி குடியிருப்போருக்கு, எட்டு ஆண்டு குடியுரிமை வழங்கும் மசோதா குறித்து அறிவிப்பார் என, தகவல்கள் வெளியாகிஉள்ளன.

இந்த மசோதாவின்படி, இந்தாண்டு, ஜன.,1 நிலவரப்படி, அமெரிக்காவில் சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாமல் வசிப்போருக்கு, அவர்கள் ஒழுங்காக வரி செலுத்தியிருந்தால், ஐந்து ஆண்டுகள் தற்காலிகமாக தங்கும் உரிமை வழங்கப்படும்.அதுபோல, குறிப்பிட்ட தகுதி உடையோருக்கு, தற்காலிக, 'கிரீன் கார்டு' வழங்கப்படும். ஐந்து ஆண்டு கால முடிவில், அவர்கள் நிரந்தர குடியுரிமை கோர முடிவு செய்தால், மேலும், மூன்றாண்டுகள் குடியுரிமை நீட்டிக்கப்படும்.
குழந்தைகளாக இருந்த போது, சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறி, தற்போது பள்ளி அல்லது கல்லுாரிகளில் பயில்வோர், விவசாய தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து பெற்றுள்ளோருக்கும், இந்த மசோதா சட்டப்பூர்வ குடியுரிமை வழங்க வகை செய்கிறது.குடியுரிமை தொடர்பாக டிரம்ப் அரசு விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தையும், ஜோ பைடன் தளர்த்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE