புதுடில்லி : விவசாயிகளை வஞ்சித்து விட்டதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி வரும் வேளையில் காங்கிரஸ் தான் விவசாயிகளை ஏமாற்றி விட்டதாக சில புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் #CongressBetrayedFarmers என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இந்த போராட்டத்தை வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மத்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர். விவசாயிகளை பா.ஜ., அரசு வஞ்சித்துவிட்டதாகவும், விவசாய மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் கூறுகையில், ''விவசாயத்தை அழிக்கவே மத்திய அரசு இப்படி ஒரு வேளாண் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் ஆதரவை தெரிவிக்கிறேன். நாட்டில் உள்ள அனைவருக்காகவும் விவசாயிகள் போராடுகின்றனர். இதற்கு நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ., சார்பில் சில புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 2009 முதல் 14 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் 1.52 லட்சம் மெட்ரிக் டன் அளவில் தான் குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்துள்ளது. ஆனால் 214 முதல் 2019 வரையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் 76.85 லட்சம் மெட்ரிக் டன் அளவில் தான் குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது கூறுங்கள் யார் விவசாயிகளை வஞ்சித்தது, ஏமாற்றியது என பலரும் இந்த புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் ரத்தின சுருக்கமாக, ''காங்கிரஸ் கட்சி ஒரு சட்டத்தை எதிர்க்கிறது என்றால் அதனால் நாட்டிற்கு நன்மை தான் கிடைக்கும்'' என தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக விவசாயிகளிடமிருந்து அதிக கமிஷன்களால் முகவர்கள் பணக்காரர்களாக மாறினர். விவசாயிகள் ஏழையாகவே இருந்தனர். புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை வேட்டையாடும் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து விடுவிப்பதாகும். இப்படிப்பட்ட சட்டத்தை அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் எதிர்க்கிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களை தனியாரிடம் இழக்க நேரிடும் என்று ஏன் காங்கிரஸ் கட்சி பொய்களைக் கூறுகிறது என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #CongressBetrayedFarmers என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE