புதுடில்லி : வேளாண் சட்டங்கள் விவகாரத்துக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர்கள் மீது, விவசாய சங்கங்கள் சந்தேகங்கள் எழுப்புவதற்கு, உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. 'நிபுணர் குழுவுக்கு நாங்கள் எந்த அதிகாரமும் வழங்கவில்லை. விவசாய சங்கங்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி, நாங்கள் அமைத்த நிபுணர் குழு முன் ஆஜராகி பேச வேண்டும்' என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், விவசாய சங்கங்கள் நிபுணர் குழுவுடன் பேசப் போவதில்லை என, உச்ச நீதிமன்றத்தில் கூறி விட்டன.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா, உ.பி., மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், 56 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள், மத்திய அரசுடன் பல சுற்று பேச்சு நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை.
நிபுணர் குழு
இந்நிலையில், இந்த சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளின் போராட்டங்களை எதிர்த்தும், உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூன்று சட்டங்களையும் செயல்படுத்துவதை நிறுத்தி வைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நான்கு பேர் நிபுணர் குழு ஒன்றையும் அமைத்தது. ஆனால், சில தினங்களில், அந்தக் குழுவில் இருந்து விலகுவதாக, பாரதிய கிசான் யூனியன் தலைவர் புபிந்தர் சிங் மான் அறிவித்தார்.
இதற்கிடையே, 'நிபுணர் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் நீக்கிவிட்டு, நடுநிலையான புதிய நிபுணர்களை நியமிக்க வேண்டும்' என கோரி, உச்ச நீதிமன்றத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த 'கிசான் மஹா பஞ்சாயத்து' என்ற அமைப்பு, மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை, தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் தான், நாங்கள் நிபுணர் குழுவை அமைத்தோம். அவர்கள், சட்டங்களுக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறியுள்ளதாக, ஊடகங்களில் வெளியான செய்திகளை வைத்து, அவர்கள் மீது சந்தேகங்களை எழுப்புவது சரியல்ல. நிபுணர் குழு உறுப்பினர்கள் மீது, விவசாய சங்கங்கள் சந்தேகங்கள் எழுப்புவது அதிருப்தி அளிக்கிறது.
உள்நோக்கம்
நிபுணர் குழுவுக்கு நாங்கள் எந்த அதிகாரமும் வழங்கவில்லை. அவர்கள், விவசாய சங்கங்களுடன் பேசி, பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்கவே கூறப்பட்டுள்ளது. அதனால், நாங்கள் அமைத்த நிபுணர் குழு மீது, உள்நோக்கம் கற்பிக்க கூடாது. தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், விசாரணையில் சட்டம் கூறுவதே பின்பற்றப்படும்.அதனால், விவசாய சங்கங்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி, நாங்கள் அமைத்த நிபுணர் குழு முன் ஆஜராகி பேச வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையே, நிபுணர் குழுவுடன் பேசப் போவ தில்லை என, உச்ச நீதி மன்றத்தில் விவசாய சங்கங்கள் கூறி விட்டன.
10வது சுற்றும் தோல்வி
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், மத்திய அரசு, ஒன்பது சுற்று பேச்சு நடத்தியும், தீர்வு காணப்படவில்லை. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்களும், திருத்தங்கள் தான் கொண்டு வர முடியும் என்பதில், மத்திய அரசும் உறுதியாக உள்ளதால், பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், டில்லியில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நேற்று, 10வது சுற்று பேச்சு நடத்தியது.டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த இந்த பேச்சில், 40க்கும் அதிகமான விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், மத்திய அரசு சார்பில், விவசாய அமைச்சர் நரேந்த்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:வேளாண் சட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது, ஒன்றில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கலாம்; மத்திய அரசு - விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெற்ற குழு ஒன்றை அமைத்து, ஆலோசனை நடத்தலாம். இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை ஏற்று, சட்டங்களை அமல்படுத்தலாம் என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், இதை விவசாயிகள் உடனே ஏற்காமல், தங்களுக்குள் கலந்து பேசி சொல்வதாக கூறினர். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு, சட்டபூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என, விவசாயிகள் மீண்டும் வலியுறுத்தினர். இது பற்றி விவாதிக்க வேண்டும் என கூறினர். இந்த கோரிக்கையிலும், இரு தரப்புக்கும் இழுபறி நீடித்தது. இதையடுத்து, மீண்டும் நாளை பேச்சு நடக்கிறது.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, 10வது சுற்று பேச்சும் தோல்வியில் முடிந்தது.
மத்திய அரசு மனு வாபஸ்
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாய சங்கங்கள், வரும் 26ல் குடியரசு தினத்தன்று, டில்லியில், டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளன. இந்த பேரணிக்கு தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த, தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: பேரணி அல்லது கூட்டம் போன்றவற்றை அனுமதிப்பது அல்லது தடை விதிப்பது தொடர்பாக, நாங்கள் முடிவெடுப்பது சரியாக இருக்காது. பேரணி குறித்து முடிவெடுக்க வேண்டியது போலீசார் தான். போலீஸ் முடிவு செய்யட்டும். நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. அதனால், மனுவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, பேரணி பற்றி டில்லி போலீசார் முடிவு செய்யட்டும் என தெரிவித்து, மனுவை மத்திய அரசு நேற்று வாபஸ் பெற்றது.
மாற்று பாதையை ஏற்க மறுப்பு
டிராக்டர் பேரணி தொடர்பாக, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், டில்லி, ஹரியானா, உத்தர பிரதேச மாநில போலீஸ் உயர் அதிகாரிகள், டில்லியில் நேற்று பேசினர்.
இந்த கூட்டம் பற்றி, விவசாய சங்கத் தலைவர் ஓங்கர் சிங் அகவுல் கூறியதாவது:டிராக்டர் பேரணியை, டில்லியில், 'ரிங்' சாலையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக, போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அதற்கு, போலீசார், 'குண்ட்லி - -மானேசர்- பல்வால் அதிவேக நெடுஞ்சாலைக்கு, பேரணியை மாற்ற வேண்டும்' என, கேட்டுக் கொண்டனர். அதற்கு நாங்கள், 'போலீசார் கூறும் பாதை வழியாக டிராக்டர் பேரணியை நடத்த முடியாது; திட்டமிட்ட ரிங் சாலையில் தான் பேரணியை நடத்துவோம்' என, தெரிவித்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.
இதையடுத்து, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், போலீசார், இன்று மீண்டும் பேசுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE