புதுடில்லி: பூடான் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு, நல்லெண்ண அடிப்படையில் மத்திய அரசு அனுப்பி வைத்த கொரோனா தடுப்பூசி, அந்நாடுகளை நேற்று சென்றடைந்தன. சீனாவின் ராஜதந்திர நடவடிக்கையை முறியடிக்கவே, தடுப்பூசி ஏற்றுமதியில் மத்திய அரசு வேகம் காட்டுவதாக கூறப்படுகிறது.
'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பு மருந்துகளுக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதிக்குப் பின், மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணி, நாடு முழுதும்துவங்கியுள்ளது
ஒரு லட்சம், 'டோஸ்'
இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில், நட்பு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணியையும், மத்திய அரசு துவங்கியுள்ளது.அந்த வகையில், தெற்காசிய நாடுகளான, பூடான் மற்றும் மாலத்தீவுகளுக்கு, ஒரு லட்சம், 'டோஸ்' கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை, மத்திய அரசு நேற்று அனுப்பி வைத்தது.
அவை, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு நேற்று சென்று சேர்ந்தன.அந்த வரிசையில், ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளான, வங்கதேசம், மியான்மர், நேபாளம், செஷல்ஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளும், நம் தடுப்பு மருந்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. 'அந்நாடுகளில், ஒழுங்குமுறை அனுமதி கிடைத்தவுடன், தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி துவங்கும்' என, தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிய நாடுகளைத் தாண்டி, கிழக்காசிய நாடான, தென் கொரியா, மத்திய கிழக்கு நாடுகளான, கத்தார், பஹ்ரைன், மேற்காசிய நாடான, சவுதி அரேபியா, வட ஆப்ரிக்க நாடான, மொராக்கோ, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளும், நம் தடுப்பூசி கொள்முதலுக்கான ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கண்டனம்
இதற்கிடையே, இந்திய எல்லையில் சீனா நிகழ்த்தி வரும் அத்துமீறல்கள் குறித்து, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த கெட்ட பெயரை மறைக்க, தடுப்பூசி வழங்கும் பணியில், ஆசிய நாடுகளுக்கு உதவுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அவர்களின் நன்மதிப்பை பெற சீனா முயன்று வருகிறது.சீனாவின் இந்த ராஜதந்திர நடவடிக்கையை முறியடிக்கவே, நட்பு நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் தடுப்பூசி வழங்கும் பணியை, இந்தியா முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.-
கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு தர முடியாது
'தற்போது பயன்பாட்டில் உள்ள, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை, குழந்தைகள், பள்ளி மாணவ - மாணவியருக்கு வழங்க முடியாது. அவர்களுக்கு, மூக்கின் வழியே செலுத்தும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.என்.டி.ஆர்.எப்., எனப்படும், தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவின், 16வது ஆண்டு நிறுவன நாள் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா, வீரர்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள், இளம்வயதினர் இடையே பரிசோதித்து பார்க்கப்படவில்லை.
அதனால், இவற்றை அவர்களுக்கு அளிக்க முடியாது. அவர்களுக்கு மூக்கின் வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தே சிறந்ததாக இருக்கும். 'பாரத் பயோடெக்' நிறுவனம், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.லேசான அறிகுறிகள் இருந்தாலும், சிறுவர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கப்பட வேண்டும். அவர்கள் மூலம், வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புள்ளது.கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள், 4 - 6 வாரத்தில், தடுப்பூசியை போட்டுக் கொள்வது சிறந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE