வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டு, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் முறைப்படி துவங்கிய பிறகு, அடுத்தநாள், அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கும், தே.ஜ., கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்காக, வரும், 29ல் பார்லிமென்ட் கூடுகிறது. அன்று, இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.
ஆலோசனை
பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து, பிப்., 15 வரையில், முதற்கட்டமாக நடைபெறும் கூட்டத்தொடர், மீண்டும் மார்ச் 8ல் துவங்கி, ஏப்ரல் 8 வரையில், இரண்டாம் கட்டமாகவும் நடைபெறவுள்ளது.கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே, சபை நடவடிக்கைகளை, சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சிகளின் கூட்டமும், தே.ஜ., கூட்டணி கட்சியினரின் கூட்டமும் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இம்முறை, கூட்டத்தொடர் துவங்கியபிறகு, அடுத்த நாளில் தான், ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.அதன்படி, அரசு தரப்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டம், வரும், 30ம் தேதி, காலை, 11:30க்கு நடைபெறுகிறது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கவுள்ளார்.
அழைப்பு
இக்கூட்டத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதேநாளில், தே.ஜ., கூட்டணியின் ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளது. பா.ஜ., தவிர, அக்கூட்டணியில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளான அ.தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம் மற்றும் சில சிறிய கட்சிகளின் எம்.பி.,க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ''கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த இரு கூட்டங்களுமே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும்,'' என்றார்.
இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், லோக்சபா அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அதேபோல, ராஜ்யசபா கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை, சபாநாயகர் வெங்கையா நாயுடுவும் நடத்தி வருகிறார்.
இக்கூட்டங்கள் நடை பெறும் தேதி, இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆஸி., பிரதமருக்கு மோடி நன்றி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற, பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான, ஐந்து நாள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வாழ்த்துகளை தெரிவித்தார்.இதற்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:பரபரப்பான கிரிக்கெட் தொடரில், இரண்டு அணிகளுமே தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தின. இரு அணிகளுமே, களத்தில் வலிமை மிக்க போட்டியாளர்களாக திகழ்ந்தனர். வாழ்த்து தெரிவித்த ஸ்காட் மோரிசனுக்கு நன்றி.இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய ஆட்சியாளர்களை விளாசிய பிரதமர்
உத்தர பிரதேசத்தில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 6.1 லட்சம் பயனாளர்களுக்கு, 2,691 கோடி ரூபாய் உதவி தொகையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு, அரசு உதவித் தொகை வழங்கும் என்று, கடந்த காலங்களில் மக்கள் நம்பவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், தவறான திட்டங்களையே வகுத்தனர். அவர்களின் தவறான நோக்கங்களால் ஏற்பட்ட விளைவுகள், ஏழை எளிய மக்கள் தலையில் விடிந்தன.அப்படிப்பட்ட மோசமான ஆட்சியை வழங்கிய அரசுகளை, உத்தர பிரதேச மக்கள் மறக்கவில்லை.மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி, மாநிலத்திற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு என் பாராட்டுகள்.இவ்வாறு அவர் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE