பெங்களூரு :சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலா 66 இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாக உள்ள நிலையில் அவருக்கு நேற்றுதிடீரென மூச்சுத்திணறல் காய்ச்சல் அதிகம் ஏற்பட்டதால் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா; சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் 2017 பிப். 15ல் அடைக்கப்பட்டார்.
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம் முடிவடைந்ததாக சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 27ல் அவரை விடுதலை செய்யஉள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர் விடுதலையாகும் போது வரவேற்க ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. நேற்று காலை காய்ச்சல் அதிகமாகி மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. உடன் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே நீரிழிவு ரத்த அழுத்தம் இருப்பதால் உமா என்ற டாக்டர் தலைமையில் நான்கு பேர் இடம் பெற்ற மருத்துவ குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தது.
நேற்று மாலை அவருக்கு காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் அதிகமானதால் உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து பவுரிங் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி ஸ்ரீகாந்த் கூறுகையில் ''சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் அதற்கான பரிசோதனையும் செய்யப்படும்'' என்றார்.
சிறையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு மருத்துவமனை உள்ளே சென்றார்.அப்போது அவர் நேராக அமர்ந்திருந்ததை காண முடிந்தது.இதனால் அவரது உடல் நிலை அபாய நிலையில் இல்லை என்பதை உணர முடிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE