''கருணாநிதி போலவே, நானும் முதல்வரானேன்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
தமிழகம் முழுதும் பிரசாரம் செய்து வரும் முதல்வர் இ.பி.எஸ்., நேற்று காலை, காஞ்சிபுரம் மாவட்டம் சென்றார். ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜரை தரிசித்த பின், மணிக்கூண்டு அருகே பிரசாரத்தை துவக்கினார். பின், வாலாஜாபாத், காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை, தேரடி உள்ளிட்ட பல பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: நான் நேரடியாக, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என, ஸ்டாலின் பேசுகிறார். அண்ணாத்துரை மறைந்த பின், கருணாநிதி சூழ்ச்சி செய்து முதல்வரானார்; அவர் நேரடியாக முதல்வராகவில்லை. மக்கள் அண்ணாதுரைக்கு தான் ஓட்டளித்தனர். அதுபோலவே, நானும் முதல்வரானேன். வரும், 27ம் தேதிக்கு பின், பழனிசாமி ஆட்சியில் நீடிப்பாரா என, ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்; நீடிப்பேன். உழைப்பால் வளர்ந்தவன் நான். நான்கு ஆண்டு ஆட்சி நிறைவு பெறுகிறது.
அ.தி.மு.க.,வை, ஸ்டாலின் போன்ற பலர் வந்தாலும் உடைக்க முடியாது. தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு, 30 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதுவரை, 55 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகளை இந்த ஆட்சி வழங்கியுள்ளது. 'நீட்' தேர்வு வந்ததற்கு காங்கிரசும், தி.மு.க.,வுமே காரணம். அரசு பள்ளி மாணவர்களுக்காக, 7.5 சதவீத உள்ஒதுக்கீடால், இந்தாண்டு, 313 பேர்; அடுத்தாண்டு, 443 பேர் மருத்துவம் படிப்பர்.தி.மு.க, ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு, 2 ஏக்கர் தருவதாக கூறினர்.
எத்தனை பேருக்கு கொடுத்தார்கள். நாட்டையே பட்டா போடுகிற கும்பல், அந்த கும்பல். இது, மக்களுக்கு தெரியும். மக்கள் ஆதரவுடன், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும். காஞ்சிபுரத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்படும் என, வாக்குறுதி அளித்தோம். அதை நிறைவேற்றினோம். செங்கல்பட்டு மாவட்டத்தில், குடிமராமத்து பணியால், ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளதை பார்க்கும் போது, மகிழ்ச்சியாக உள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், புதிய உலகத்தரம் வாய்ந்த, சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் அமைக்க, 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 40 சதவீத பணிகள் நடந்துள்ளன. தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றிபெறும் என, ஸ்டாலின், பகல் கனவில் பேசி வருகிறார். லோக்சபா தேர்தலில், மக்களிடம் பொய் பிரசாரம் செய்து, வெற்றி பெற்றார். வரும் சட்டசபை தேர்தலில், அந்த பிரசாரம் எடுபடாது. இவ்வாறு, முதல்வர் பேசினார்.
- நமது நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE