நல்ல உணர்வுகளால் நம்மை நிரப்புவோம்

Added : ஜன 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
முகநுாலின் மெசெஞ்சர் பகுதியில் செய்தி ஒன்று வந்த நாள்... யாரென்று பார்க்கும் போது நட்பின் இணைப்பில் இருப்பவர் எனப்புரிந்தது. நட்பில் இருக்கும் அந்தப் பெண்ணின் செய்தி ஒரு இணக்க உணர்வைத் தர ஆரம்பித்தது.தினந்தோறும் ஒரு குட் மார்னிங்கில் ஆரம்பித்து மெல்ல சகஜமாகப் பேசஆரம்பித்து புற்று நோயின் நான்காவது கட்டம் என்பதை கூறி அவரது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களைப் பகிர
 நல்ல உணர்வுகளால் நம்மை நிரப்புவோம்

முகநுாலின் மெசெஞ்சர் பகுதியில் செய்தி ஒன்று வந்த நாள்... யாரென்று பார்க்கும் போது நட்பின் இணைப்பில் இருப்பவர் எனப்புரிந்தது. நட்பில் இருக்கும் அந்தப் பெண்ணின் செய்தி ஒரு இணக்க உணர்வைத் தர ஆரம்பித்தது.தினந்தோறும் ஒரு குட் மார்னிங்கில் ஆரம்பித்து மெல்ல சகஜமாகப் பேசஆரம்பித்து புற்று நோயின் நான்காவது கட்டம் என்பதை கூறி அவரது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களைப் பகிர ஆரம்பித்து இருந்தார்.

ஆனால் எந்தசமயத்திலும் பணம் தேவை என்பதை நேரிடையாக அவர் கேட்கவில்லை என்றபோதிலும் மறைமுகமாக அவரது உணர்வுகளால் அதை உணர்த்துவது போல இருந்தது. பணம் ஏதும்தேவைப்படுமா என்று ஒருகட்டத்தில் நானாகவே கேட்க ஆரம்பித்தபோதுதான் அதைச்சொல்ல ஆரம்பித்தார்.மருந்து வாங்ககூட காசில்லை, சாப்பிடலை என்ற வார்த்தைகள் எனக்குள் ஏதோ ஒன்றைத்துாண்டியது. பாவம் என்று நான் யோசிக்க ஆரம்பித்தது தான் உணர்வின் துாண்டல் என்பது புரியவில்லை எனக்கு. பணம் கொடுக்கலாம் என்று யோசித்தபோது உள் மனது என்னிடம் சற்று நிதானிக்கச்

சொன்னது. பணம் கொடுப்பதில் சுணக்கம் காட்டினேன். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து என் நட்பு வட்டாரத்தோழிகளிடமும் மியூச்சுவல் பிரண்டு என்ற பெயரில் நட்பாகி இருந்து, சிலரிடம் இதேபோன்று பரிதாபஉணர்வை ஏற்படுத்தி பணம்வாங்கிய
விஷயம் தெரிந்து அதிர்ச்சியானேன். மீண்டும் அவரை ஆழ்ந்து கேள்விகள் கேட்க விளைந்த போது அவர் என்னை பிளாக் செய்திருந்தார். இந்த சம்பவத்தை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் 'எமோஷனல் 'மனிதர்களாக எப்போதும் இருப்பது கூடாது என்பதற்காகத் தான்.வள்ளுவர் அதனால் தான் 'எப்பொருள் யார் யார்வாய்க்கேட்பினும்அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு' என்கிறார்.


உணர்வுகளுக்கு அடிமைமனித மனம் பொதுவாகவே உணர்வுகளுக்கு அடிமையாகவே இருக்கிறது. அந்த உணர்வுகள் இங்கே காசாக்கப் படுகின்றன என்பது இதன் அடிப்படை உண்மை. சந்தோஷமோ, துன்பமோ அதை அதிகமாக பிரதிபலித்துவிடுவது பெரும்பாலும் ஆபத்திலேயே முடியலாம். பொது வெளியில் நம்மை அறியாமல் தொடரும் நிழல் மனிதர்கள் அதிகம். பொது வெளியிலும், முக நுாலிலும் நாம் பகிரும் நம் டேட்டாக்கள், ஆப்களில் சொல்லப் படும் நம் விபரங்கள் யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவதே இல்லை. நான் இன்று ஊருக்குப் போறேனே என்று போடும் ஸ்டேட்டஸ்கள் திருடர்களுக்கு நாம் கொடுக்கும் வாய்ப்பு.யாரேனும் ஆறுதல் தர மாட்டார்களா என்ற நோக்கத்தில் அத்தனை அந்தரங்க விஷயங் களையும் பகிர்ந்து விடுகிறோம். ஆனால்மறை முகமாக ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம்.
உணர்வுகளை அடக்கி ஆள்வது முடியுமா என்றால் சற்று கடினம் தான். உணர்வுகளை வெளிப் படுத்தாத ஆணை 'கல்லுளி மங்கனாக' பெயரிட்டுக்கொள்கிறது சமூகம். ஆனால் இது ஆணின் பலம்.பெண்களுக்கோ பல நேரங்களில் அது பலவீனமாகி விடுகிறது. பேச்சாலோ, எழுத்தாலோ,
விளம்பரங்களாலோஇந்த ஏமாற்றுத் தனம் நடந்து கொண்டு இருக்கிறது.


மூளைச்சலவைநான்கே நாட்களில் சிகப்பழகு என்ற விளம்பரம் பார்க்கும் மக்கள் உணர்வுகளுக்கு அடிமையாகி அதை வாங்க ஆசைப்படுகிறார்கள். அங்கே நம் பணம் நஷ்டமாகிறது. அப்படியானால் எல்லாமே ஏமாற்று வேலை தானா என்று கேட்டால் இல்லை தான். ஆனால் நாம் எங்கே மூளைச் சலவை செய்யப்படுகிறோம் என்பதை மட்டும் யோசித்து, யார் கூறினாலும், என்ன நடந்தாலும் அதன் சாதக, பாதகங்களை அலசினால் மட்டும்போதும்.என்னை ஏமாத்திட்டான் அவன் என்று சொல்லும் முன் யோசித்தால் ஏமாந்தது நாம் தான் என்பது தெரியும். ஒவ்வொரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் போது உங்கள் மனதிடம் கேளுங்கள். நல்ல விஷயங்களுக்கு மட்டுமே அது சரி எனச் சொல்லும்.


உணர்வைத் தரும் மனிதர்கள்நல் எண்ணங்களை கொண்ட மனிதர்கள் நல்ல உணர்வுகளைத் தோற்றுவிப்பார்கள். இவர்களால் நம் மனம் பலப்படும். எதிர்மறையான உணர்வுகளைக் கொண்ட மனிதர்கள் நம் மனதை பலவீனப்படுத்துபவர்கள். இவர்களிடம் இருந்து விலகியே இருக்கவேண்டும்.ஏதேனும் செயல்களில் இறங்கும் போது இதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க என்று அந்த செயலை செய்ய விடாமல் அதனைக் குலைக்கும் மனிதர்கள் இத்தகைய வகை.நாம் சரியாக இருந்தால் கூட நம் மனதை அவர்கள் உணர்வுகளால் நம்ப வைப்பவர்கள். 'உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன். நீங்க வேண்டியவங்கங்கறதால தான் சொல்றேன்' என்று பேசும் மனிதர்கள் உண்மையிலேயே நல்லதிற்குத் தான் சொல்கிறாரா என்பதை ஆராயவேண்டும். இங்கே ஒவ்வொரு வழியிலும் மனித உணர்வுகள் காசாக்கப்படுகின்றன. ஆட்டுமந்தைக் கூட்டம்போல எல்லாவற்றையும் நம்பி விடுகிறோம். விளைவுகள் பற்றி யோசிப்பதில்லை.


என்ன தான் வழிஉணர்வுச் சமநிலை தான் அதற்கான வழி. உணர்வுகளை சற்று கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் விழித்திரு மனமே என்பது தான் தேவை. ஒரு சின்னக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.மனதில் எழும் அதீத உணர்வுகளைக் கட்டுப்படுத்த தெரியாமல் மன நலமருத்துவர் ஒருவரைப் பார்க்கச் செல்கிறான் ஒருவன். அவனது பிரச்னையைக் கேட்ட மருத்துவர் அவனை கேள்விகள் கேட்டு நிதானப்படுத்தலாம் என நினைக்கிறார். உனக்கு அதிர்ஷ்ட சீட்டு ஒன்றில் 5000 கிடைக்கிறது என்றால் என்ன செய்வாய் என்று கேட்கிறார் அவனிடம். அவன் நான் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவேன் என்று சொல்கிறான். பத்தாயிரம் கிடைத்தால் என்ன செய்வாய்னு கேட்க கடனை அடைப்பேன் என்று சொல்கிறான். பத்து லட்சம் விழுந்தால் என்று கேட்க வீடு கட்டுவேன், கார் வாங்குவேன் என்று சொல்ல, ஒரு கோடி விழுந்தால் என்ன செய்வாய் என்று கேட்க சற்றே யோசித்தவன் இல்லை டாக்டர் எனக்கு அவ்ளோ பணம் கிடைச்சா என்ன செய்யணும்னு தெரியாது.

அதனால் அதை உங்க கிட்டயே கொடுத்துவேன் என்று சொல்ல இப்ப டாக்டர் அதிர்ச்சியில் மயங்கி விழுகிறார். வேடிக்கை யான கதையாகத் தெரிந்தாலும் எத்தனை உளவியல் அறிந்திருந்தாலும் கூட இயல்பாக அதனை எதிர்கொள்ளும் போது பலர் தடுமாறிப் போகின்றனர்.மன உணர்வுகளால் தடுமாறும் மனிதர்களுக்கு எது நடந்தாலும் நான் இருக்கிறேன் என்ற உணர்வைத் தரும் வீடுகளும், நட்பும், சமூகமும் அவசியம். அந்த உணர்வுகளை கொடுக்கும் நபராக நாம் இருக்கிறோமா, ஒரே ஒரு சொல்கூட பலரை மீட்டெடுப்பதாக இருக்கும். வெல்லும் சொற்களாக அவை இருக்க வேண்டும். பிறரைக் கொல்லும் சொற்களாக இருக்கக்கூடாது.
சந்தோஷம், துக்கம்வெற்றி வரும்போது அதீத சந்தோஷமும், தோல்வி வரும் போது வரும் அதீத வருத்தமும் ஆபத்தானவை. வெற்றிகளை அதிகம் கொண்டாட ஆரம்பிக்கும் போது நாம் அதிலேயே தேங்கி விடுகிறோம். பழைய வெற்றிகளிலேயே சந்தோஷம் அடைந்து திருப்தி அடைந்து விடாமல் அடுத்து என்ன என்று நகர்வதே வளர்ச்சியைத் தரும். எனக்கு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்ற புலம்பல் உணர்வு நம்மை அடுத்த கட்டத்திற்கு நகரவிடாது. இதுவும் கடந்து போகும் என்பதை அறிந்து உணர்வுகளைச் சமன் செய்தால் மட்டும் போதும். ஒருவரை அதிகமாக நம்புதல் எவ்வளவு தவறோ, அதே அளவு எவரையும் நம்பாமல் இருப்பதும் தவறு. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதன் பொருள் எல்லாவற்றுக்கும் நம் மனது தான் காரணம். எந்த செயலைச் செய்வதற்கு முன் கொஞ்சம் சற்று நிதானித்து இறங்கலாம். நிதானமாக முடிவெடுத்து செய்யும் செயல்கள் அழகாகும்.நல்ல உணர்வுகளால் நம்மை நிரப்புவோம். புதிய உணர்வுகளால் புத்துணர்வு பெறுவோம்.- ம.ஜெயமேரி, ஆசிரியைக.மடத்துப்பட்டி bharathisanthiya10@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Prithviraj - SALEM,இந்தியா
21-ஜன-202118:00:59 IST Report Abuse
Sathya Prithviraj ரொம்ப அற்புதமான கருத்தாழமிக்க வரிகள்.. "மனித உணர்வுகள் காசாக்கப்படுகின்றன". உண்மையோ உண்மை மேடம் . அருமையான கட்டுரை உங்கள் மூலமாய் படிக்க நேர்ந்தது . நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X