அமெரிக்க அதிபரானார் ஜோ பைடன், துணை அதிபரானார் கமலா ஹாரிஸ்

Updated : ஜன 21, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
வாஷிங்டன் :புதிய வரலாற்று சாதனையுடன், அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிசும், நேற்று பதவியேற்றனர்.சமீபத்தில் பார்லிமென்ட் வளாகத்தில் வன்முறை நடந்ததால், பதவியேற்பு விழாவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் அமெரிக்க வரலாற்றில் இல்லாத வகையில், பதவியில் இருந்து விலகும் அதிபர், புதிய
ஜோ பைடன்  , கமலா ஹாரிஸ், பதவியேற்பு,

வாஷிங்டன் :புதிய வரலாற்று சாதனையுடன், அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிசும், நேற்று பதவியேற்றனர்.சமீபத்தில் பார்லிமென்ட் வளாகத்தில் வன்முறை நடந்ததால், பதவியேற்பு விழாவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் அமெரிக்க வரலாற்றில் இல்லாத வகையில், பதவியில் இருந்து விலகும் அதிபர், புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதற்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். அதன்படி, கடந்தாண்டு, நவ., 3ல் அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதுவரை அமெரிக்க வரலாற்றில் நடந்திராத பல, 'முதல்'கள் இந்த தேர்தலில் நடந்துள்ளன.கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே, தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், தபால் ஓட்டுகள் அளிக்க, அதிக வாய்ப்புகள் முதல் முறையாக தரப்பட்டது.

இந்தத் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வென்றார்.அவருடன், துணை அதிபராக, கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டார்.துணை அதிபராக, ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக உடைய ஒரு பெண் பதவியேற்பது, இதுவே முதல் முறை.

நீண்ட இடைவெளிக்குப் பின், அதிபராக இருப்பவர், இரண்டாவது முறை அதிபராகும் வாய்ப்பை இழந்ததும் இந்தத் தேர்தலில்தான். தற்போது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில், அதிக வயதில் அதிபர் பதவியை ஏற்ற பெருமையை பெற்றுள்ளார்.டிரம்ப் புகார்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக, டிரம்ப் தொடர்ந்து புகார் கூறி வந்தார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அவர் அனைத்து மாகாண நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். அதிபர் ஒருவரே, தேர்தல் நடைமுறையை விமர்சிப்பதும், வழக்கு தொடர்ந்ததும் இதுவே, முதல் முறை.

மேலும், அமெரிக்க வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒரு சம்பவமும், தற்போது நடந்துள்ளது. தேர்தல் முடிவுகளை அறிவிக்க, 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்தில், கூட்டுக் கூட்டம் நடந்தது. அப்போது, டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறைகளில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.இவ்வாறு பல 'முதல்'களை இந்த தேர்தல் சந்தித்தது.

வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால், புதிய அதிபரின் பதவியேற்பு விழாவை, எளிமையாகவும், கடும் கட்டுப்பாடுகளுடனும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று புதிய அதிபர் பதவியேற்பு விழா நடந்தது.


25,000 போலீசார்


டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்பதால், விழா நடைபெற்ற, கேப்பிடோல் வளாகத்தில், 25 ஆயிரம், 'நேஷனல் கார்டு' எனப்படும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதுவும் அமெரிக்க வரலாறு கண்டிராத ஒன்று.அமெரிக்க நேரப்படி, நேற்று பகல் 12:00 மணிக்கு, கேப்பிடோலின் மேற்கு பகுதியில் உள்ள மணிகூண்டில் ஒலி எழுப்பப்பட்டது.

அப்போது ஜோ பைடனுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் 46வது அதிபராக 78 வயது பைடன் பதவியேற்றார்.தன் குடும்பத்தின் 127 ஆண்டு கால பைபிளின் மீது உறுதி ஏற்று அவர் பதவியேற்றார். பைடனின் மனைவி டாக்டர் ஜில் பைடன் அந்த பைபிளை கையில் ஏந்தியிருந்தார்.

அதைத் தொடர்ந்து நாட்டின் 49வது துணை அதிபராக 56 வயதாகும் கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்றத்தின் முதல் லாட்டின் நீதிபதியான சோனியா சோட்டோபயோர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடும்ப நண்பர் ரஜினா ஷெல்டன் உச்ச நீதிமன்றத்தின் முதல் ஆப்ரிக்க அமெரிக்க நீதிபதியான தர்குட் மார்ஷல் ஆகியோரின் பைபிள்கள் மீது உறுதி அளித்து அவர் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

புதிய அதிபர் துணை அதிபர் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா ஜார்ஜ் டபிள்யூ புஷ் பில் கிளின்டன் பங்கேற்றனர். அவர்களுடைய மனைவியரான மிச்சைல் ஒபாமா லாரா புஷ் ஹிலாரி கிளின்டனும் பங்கேற்றனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பதவியில் இருந்து விலகும் அதிபர் பங்கேற்காததும் இதுவே முதல் முறை. தன் பதவியின் கடைசி நாளான நேற்று வெள்ளை மாளிகையில் இருந்து டொனால்டு டிரம்ப் வெளியேறினார். புளோரிடாவில் உள்ள இல்லத்துக்கு அவர் குடிபுகுகிறார். புதிய நிர்வாகத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் கூறினார்.

அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் நாட்டு மக்கள் இடையே உரையாற்றினார். அவருடைய உரையை இந்தியாவை பூர்வீகமாக உடைய வினய் ரெட்டி தயாரித்துள்ளார்.அதிபரின் உரையை தயார் செய்யும் அதிகாரியாக இந்தியாவை பூர்வீக மாக உடையவர் நியமிக்கப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறை.ஜோ பைடன் கமலா ஹாரிஸ் நிர்வாகத்தில் 13 பெண்கள் உள்பட இந்தியாவை பூர்வீகமாக உடைய 20 பேர் இடம் பெறுகின்றனர்.

அமெரிக்க நிர்வாகத்தில் மற்ற நாடுகளை பூர்வீகமாக உடையவர்கள் அதிக அளவில் இடம்பெறுவதுவும் இதுவே முதல் முறை.முன்னதாக அமெரிக்க நேரப்படி காலை 11:00 மணிக்கு பதவியேற்பு விழாவுக்கான நிகழ்ச்சிகள் துவங்கின. பைடனின் குடும்பத்துக்கு நெருக்கமான பாதிரியார் லியோ ஜெரமையா ஓடோனோவான் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின.

நாட்டின் முதல் ஆப்ரிக்க அமெரிக்க தீயணைப்பு வீராங்கனை மற்றும் ஜார்ஜியாவின் தீயணைப்புத் துறை தலைவரான ஆன்ட்ரியா ஹால் உறுதிமொழியை வாசித்தார். பதவியேற்பு விழாவுக்குப் பிறகு பாரம்பரிய ராணுவ அணிவகுப்பு நடந்து. நாட்டின் முப்படைகளின் தலைவராக உள்ள அதிபரிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு விர்ஜீனியாவில் உள்ள ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் ஜோ பைடன் கமலா ஹாரிஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு ராணுவ பாதுகாப்புடன் அதிபரின் அரசு இல்லமான வெள்ளை மாளிகைக்கு ஜோ பைடன் பேரணியாக அழைத்து செல்லப்பட்டார். அதே நேரத்தில் மற்ற மாகாணங்களில் இதுபோன்ற அணிவகுப்பு நடந்தது. அது 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஒளிபரப்பப்பட்டது.புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


குவிந்த பிரபலங்கள்


ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் விழாவில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் இந்த முறை பல நிகழ்ச்சிகள் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஒளிபரப்பப்பட்டன.'கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பதவியேற்பு விழா நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்தப்படும்' என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

'பதவியேற்பு விழா 'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. அதனால் வீட்டில் இருந்தே ரசிக்கவும்' என பொதுக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக 90 நிமிடங்களுக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பிரபல நடிகர்கள் கிறிஸ்டோபர் ஜான்சன் லின்மேனுவல் மிரண்டா ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தேசியகீதத்தை பிரபல பாடகி லேடி காகா பாடினார். ஜெனிபர் லோபஸ் கார்த் புரூக்ஸ் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


பதவியேற்பு எப்படி


* 1801ல் இருந்து கேப்பிடோல் பார்லிமென்ட் கட்டடத்திற்கு முன் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
* அதிபரின் பதவி பிரமானத்தில் 35 வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.
* 1945ல் 33வது அதிபரான ஹாரி ட்ரூமன் பதவியேற்பு நிகழ்ச்சி முதன்முறையாக 'டிவி'யில் ஒளிபரப்பானது.
* 1997 ல் பில் கிளிண்டன் இரண்டாவது முறை பதவியேற்ற நிகழ்ச்சி, முதன்முறையாக இன்டர்நெட்டில் ஒளிபரப்பானது.
* 1829ல் 7வது அதிபரான ஆன்ட்ரூ ஜாக்சன், பதவியேற்பு நிகழ்ச்சியை பார்வையிட முதன்முறையாக மக்களை அனுமதித்தார்.
* பதவியேற்பு விழாவில் நீண்ட உரையாற்றியவர் (8460 வார்த்தைகள்) 14வது அதிபரான வில்லியம் ெஹன்ரி ஹாரிசன். 2வது இடத்தில் 31வது அதிபர் வில்லியம் ஹாவர்டு டாப்ட் (5434 வார்த்தைகள்) உள்ளார்.
* இதுவரை ஜனநாயக கட்சி சார்பில் 15 அதிபர்களும், குடியரசு கட்சி சார்பில் 19 அதிபர்களும் பதவி வகித்துள்ளனர்.


கண்ணீருடன் விடைபெற்றார்


ஜோ பைடன் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் வாஷிங்டனுக்கு குடிபுகுந்தார். சொந்த ஊரான டெலாவரேயில் உருக்கமாக பேசி கண்ணீருடன் விடைபெற்றார்.முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் துணை அதிபராக இருந்தவர் ஜோ பைடன். கடந்த 2016 தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து தனது சொந்த ஊரான டெலாவரேக்கு திரும்பினார் பைடன்.

நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் வாஷிங்டனில் குடிபுகுந்தார். அதையடுத்து டெலாவரேயில் இருந்து தன்னுடைய மனைவி டாக்டர் ஜில் பைடன் மகன் பேரக் குழந்தைகள் உறவினர்கள் என பலருடன் புறப்பட்டார். அப்போது டெலாவரே மக்களிடையே அவர் உருக்கமுடன் பேசியதாவது: கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா என்னை வரவேற்று அழைத்துச் சென்றார். தற்போது ஆப்ரிக்க தெற்காசியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸை சந்திக்க உள்ளேன்.அமெரிக்காவின் அதிபராக பதவியேற்பதில் பெருமைப்படுகிறேன். நான் எப்போதும் டெலாவரேயின் மகன்தான். அதை மறக்க மாட்டேன். என்னுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மண்ணுக்கு பங்குள்ளது.இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.


இளமை... முதுமை


* அமெரிக்காவின் வயதான அதிபர் ஜோ பைடன் (78 ஆண்டு 61 நாள்). இதற்கு முன் டிரம்ப் (70 ஆண்டு, 220 நாட்கள்) இருந்தார்.
* 26வது அதிபரான தியோடர் ரூஸ்வெல்ட் (42 வயது) இளம் அதிபர் என பெயர் பெற்றவர். இவரே நீண்டநாட்கள் (12 ஆண்டு) பதவி வகித்தவர்.
* குறைந்த நாட்கள் (32 நாள்) பதவி வகித்தவர் 9வது அதிபரான வில்லியம் ெஹன்ரி ஹாரிசன்.
* அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றவர் ஜோ பைடன் (8,12,81,502 ஓட்டுகள்). இரண்டாவது இடத்தில் ஒபாமா (7,42,22,593 ஓட்டுகள்) உள்ளார்.


ஜோ பைடன் பின்னணி


* 1942 நவ., 20ல் அமெரிக்காவின் பென்சில்வேனியோவில் பிறந்தார்
* சட்டப்படிப்பு முடித்தவர்.
* செனட் சபைக்கு தேர்வான இளம் எம்.பி.,க்களில் ஒருவர்.
* ஜெர்மனியை சேர்ந்த ஷாம்ப், மேஜர் என இரு நாய்களை வளர்க்கிறார்.
* 1972ல் நடந்த விபத்தில் மனைவி, ஒரு வயது மகளை இழந்தார். இரு மகன்கள் காயமடைந்தனர்.
* 1975ல் ஜில் பைடனை 2வது திருமணம் செய்தார்.
* 2009 -2017 : துணை அதிபராக பதவி வகித்தார்.
* 1994ல் அமலான பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டத்தை சக எம்.பி., ஒர்ரின் ஹாட்ச்சுடன் இணைந்து உருவாக்கினார்.
* ஐஸ்கிரீம் பிரியர். சாக்லேட் பிளேவர் பிடிக்கும்.
* 1981ல் வெளியான 'சாரியட்ஸ் ஆப் பயர்' என்ற பிரிட்டன் படம் இவருக்கு பிடித்தமானது.


அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பின்னணி


அமெரிக்க இந்தியரான கமலா ஹாரிஸ் 55, அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக நேற்று பதவியேற்றார். இவரது பின்னணி;

* 1964 அக்., 20: கலிபோர்னியாவின் ஆக்லாந்தில் பிறந்தார். தாய் ஷியாமளா கோபாலன் மார்பக புற்றுநோய் விஞ்ஞானி. சென்னையை சேர்ந்தவர். தந்தை டொனால்டு ரிஸ்,ஜமைக்காவைச் சேர்ந்தவர்.

* அமெரிக்காவின் பெர்க்லி பல்கலையில் ஆராய்ச்சி படிப்புக்காக வந்த ஷியாமளாவும், ஹாரிசும் காதலித்து திருமணம் செய்தனர். ஹாரிஸ், ஸ்டான்போர்டு பல்கலையில் பேராசிரியராக பணியாற்றியவர்.

* 1971: பெற்றோர் விவாகரத்து பெற்றனர். தாய் மற்றும் சகோதரியுடன் கனடாவின் மான்ட்ரீல் நகருக்கு சென்றார்.

* 1986ல் ஹார்வர்டு பல்கலையில் பி.ஏ., அரசியல் அறிவியல், பொருளாதாரம் முடித்தார்.

* 1990ல் சட்டப்படிப்பு முடித்தார். இரண்டு கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றார்.

* 2003ல் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்னியாக தேர்வு.

* 2011 ல் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக தேர்வு பெற்றார். இவர் அப்பதவிக்கு தேர்வான முதல் பெண்.

* 2014ல் வழக்கறிஞரான டக்ளல் எமோபை திருமணம் செய்தார். குழந்தைகள் இல்லை. தன் கணவரின் முந்தைய திருமணத்தில் பிறந்த எல்லா, கோலோயை வளர்க்கிறார்.

* 2017ல் கலிபோர்னியாவிலிருந்து செனட்டராக பதவியேற்ற முதல் தெற்காசிய பெண் ஆனார்.

* இனவெறிக்கு எதிரான வழக்குகளில் கமலா ஹாரிஸ் ஆஜராகியுள்ளார். கல்வித்துறையில் சீர்திருத்தத்தை வலியுறுத்தினார்.
*2020 ஆக., : ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு.
* 2021 ஜன., 20: துணை அதிபராக பதவியேற்றார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
21-ஜன-202116:01:27 IST Report Abuse
Raj டிரம்ப் ஒழிந்தார். இனி அனைவருக்கும் நல்ல காலம் தான் என நம்பலாம்
Rate this:
Cancel
Mrs. Adicéam Evariste - Paris,பிரான்ஸ்
21-ஜன-202114:20:57 IST Report Abuse
Mrs.  Adicéam Evariste @ Blocked User - Blocked, Mayotte :  You are correct, Sir. 
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜன-202114:01:53 IST Report Abuse
தமிழவேல் பைடன் எந்த அரசியல் அனுபவமும் இல்லாதவர்னு சொன்ன, Shiv ram shiv Shame இதை படிக்கணும். இதையும் நம்பாத, எல்லாம் தெரிரிஞ்ச அதிபுத்திசாலி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X