சென்னை: தற்கொலை சம்பவங்களை தடுக்கவும், அப்பாவி மக்களை காக்கவும், 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டுக்கு தடை விதித்து, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
'ஆன்லைன்' வாயிலாக ரம்மி விளையாடுவதற்கு தடை விதித்து, 2020 நவம்பரில், தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது.இதை எதிர்த்து, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, 'ஜங்லி கேம்ஸ், ரீட் டிஜிட்டல்' உள்ளிட்ட நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. இம்மனுக்களுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில், தமிழக அரசின் உள்துறை துணைச் செயலர் உதயபாஸ்கர் சார்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தாக்கல் செய்த பதில் மனு:பணம் வைத்து, ஆன்லைனில் ரம்மி விளையாடும் போக்கால், அதற்கு அடிமையாகி விடுகின்றனர். அதனால், அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்; தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. பணத்துக்காக விளையாடுவதால், சம்பாதித்ததை இழக்கின்றனர்.ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து, ஐந்து ஆண்டுகளில், ஏழு பேர் தற்கொலை செய்துள்ளனர். குற்ற சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். பெற்றோரின், 'கிரெடிட் கார்டு' பயன்படுத்தி, அவர்களின் பிள்ளைகள் விளையாடுகின்றனர்.தற்கொலை சம்பவங்களை தடுக்கவும், அப்பாவி மக்களை காக்கவும், இந்த அவசர சட்டத்தை, அரசு அமல்படுத்தியது. இதனால், பணம் செலுத்தி, ஆன்லைன் வாயிலாக விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டம் இயற்ற, அரசுக்கு அதிகாரம் உள்ளது.பணம் செலுத்தி, பொது இடங்களில், ஆன்லைன் வாயிலாக, ரம்மி விளையாடுவதற்கு, அவசர சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தயம் கட்டாமல் விளையாடப்படும், அறிவுசார்ந்த விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.
சூதாட்டத்தை வணிகமாக கருத முடியாது என்பதால், அத்தகைய சூதாட்ட வணிகத்தை மேற்கொள்ள, மனுதாரர்களுக்கு அடிப்படை உரிமை இல்லை.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. விசாரணையை, பிப்., 10க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE