'மு.க.அழகிரி கட்சி துவங்கினால், ஆதரவு தருவோம்' என, சமீபத்தில் டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் சந்தித்த, முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் தெரிவிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இம்மாதம், 18ம் தேதி டில்லியில், அமித் ஷா - இ.பி.எஸ்., சந்திப்பு நடந்தது; 40 நிமிடங்கள் நடந்த, இந்த சந்திப்பின் போது, கூட்டணி குறித்தும், தினகரன் - சசிகலா குறித்தும், ரஜினியை சரியாக வழி நடத்தாதவர்கள் குறித்தும், விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவருமான மு.க.அழகிரி பற்றியும் பேசப்பட்டுள்ளது.
அவர் கட்சி துவக்கினால் பா.ஜ., தரப்பில் ஆதரவு தரப்படும் என, அமித்ஷா கூறியுள்ளார். அடுத்த நாள், பிரதமரை சந்தித்தபோது, அமித் ஷாவுடனான பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பிரதமருடனான சந்திப்பில், இருவரும் மிகப்பெரிய மேஜையின் இருபுறமும், தனித்தனியே அமர்ந்து பேசியதால், புகைப்படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், எந்தப் பத்திரிகையிலும், அவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படம் வெளியாகவில்லை.

இது பலருக்கும், சந்தேகத்தைக் கிளப்பியதால், மோடி - இ.பி.எஸ்., இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக, நேற்று முழுதும் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், இருவரும் மனம் திறந்து பேசிய பிறகே, இ.பி.எஸ்., பேட்டி அளித்தார் என்பதும், மு.க.அழகிரிக்கான ஆதரவு நிலைப்பாடும் தெரிய வந்துள்ளது. மேலும், ரஜினியை சரியாக வழி நடத்தாதவர்கள், பா.ஜ.,வுக்கும், சரியான தகவல்களை தெரிவிக்காது போனதால், இனி, அவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என, இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இ.பி.எஸ்., - மோடி சந்திப்புக்குப் பின், தமிழக அரசியல் நிலவரத்தை, அமித் ஷா உன்னிப்பாக கவனித்து, கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில், முழு மூச்சாக இறங்கி உள்ளார்.
- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE