திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பு, 'அதானி' குழுமத்துக்கு ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நேற்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
50 ஆண்டுகள்
நாடு முழுவதிலுமுள்ள விமான நிலையங்களை, தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்த விரும்புவதாக, மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, கேரள தலைநகர் திருவனந்தபுரம், அசாமின் கவுகாத்தி, உத்தர பிரதேசத்தில் லக்னோ, ஆமதாபாத், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர், கர்நாடக மாநிலம் மங்களூரு ஆகிய ஆறு விமான நிலையங்கள், தனியார் மயமாக்கப்பட உள்ளதாக, மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, இந்த விமான நிலையங்களை, 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமம், அதானி குழுமத்துக்கு கிடைத்தது.
இந்நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 'வர்த்தக ஒப்பந்தம் மூலம், திருவனந்தபுரம், கவுகாத்தி, ஜெய்ப்பூர் விமான நிலையங்களை, 2021 ஜனவரி, 19ம் தேதியில் இருந்து, 180 நாட்களுக் குள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதானி குழுமம் நிர்வகிக்க துவங்கலாம்' என கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, கேரள சட்டசபையில் நேற்று புயலைக் கிளப்பியது. கேள்வி நேரத்தின் போது, இது பற்றி உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு, முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்து பேசியதாவது: விமான நிலைய தனியார்மயமாக்கலை எதிர்த்து, விமான நிலைய ஊழியர்கள் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.மாநில அரசுக்கு அளித்த உறுதியை, மத்திய அரசு மீறியுள்ளது. விமான நிலையங்களை நிர்வகிக்கும் அனுபவம் சிறிதும் இல்லாத குழுமத்துக்கு, விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
சுத்தப் பொய்
இதனால், விமான நிலையங்கள் மேம்படும் என்பது சுத்தப் பொய். தன் அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கில், இந்த விவகாரத்தில், மத்திய அரசு சர்வாதிகாரத்தனமாக நடந்து உள்ளது.திருவனந்தபுரம் விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, மாநில அரசிடமே வழங்க, மத்திய அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.
மத்திய அரசுக்கு கேரள தலைமை செயலர் கடிதம்
மத்திய அரசுக்கு, கேரள தலைமை செயலர் விஷ்வாஸ் மேத்தா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஆஜராக கோரி, மாநில அதிகாரி ஹரிகிருஷ்ணனுக்கு, சுங்கத் துறை, 'சம்மன்' அனுப்பியது. இதையடுத்து, கடந்த, 4ம் தேதி, கொச்சியில், சுங்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில் அவர் ஆஜரானார்.
திருவனந்தபுரத்துக்கு திரும்பிய அவர், என்னிடம் அளித்த புகாரில், 'சுங்கத் துறை அதிகாரிகள், என்னை மிகவும் அவமானப்படுத்தினர். நாங்கள் சொல்வது போல், நீங்கள் பதில் அளிக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, மிரட்டல் விடுத்தனர்' என, கூறியிருந்தார். விசாரணை என்ற பெயரில், மாநில அரசு அதிகாரியை, சுங்கத் துறை அதிகாரிகள் அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. இது பற்றி முழுமையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE