கோவை : ''வேளாண் சட்டங்களை நாடு முழுவதற்கும் இல்லாமல், மாநிலங்களுக்கான ஒரு பரிந்துரையாக அளிக்கலாம்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
சத்குரு, தனது 'டுவிட்டர்' பக்கத்தில், “வேளாண் சட்டங்கள் பற்றிய விவசாயிகளின் அச்சம் பகுதிவாரியாக மதிப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகளின் தேவைகளை, அரசு ஆய்வு செய்து கவனிக்க வேண்டும். கூட்டு முயற்சியே முன்னேறும் வழி,'' என, பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது: விவசாய சட்டங்களில் எந்தெந்த விஷயங்கள் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளை வருத்துகிறது என, எனக்கு தெளிவாக தெரியவில்லை. தமிழக விவசாயிகள் யாரையும் இந்த சட்டங்கள் பாதித்ததாக தெரியவில்லை. நான், பல விவசாயிகளுடன் பேசி இருக்கிறேன். அவர்கள் யாரும், அப்படி உணரவில்லை. ஒவ்வொரு மாநில விவசாயிகளுக்கும் குறிப்பிடத்தக்க சந்தேகங்கள் இருக்கலாம்.

விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து கொண்டு இருப்பது, மற்றவர்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது. போராட்டம் முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதால், அரசும் சரிவர இயங்க முடியவில்லை.அதனால், இந்த சட்டங்களை நாடு முழுவதற்கும் இல்லாமல், அனைத்து மாநிலங்களுக்கான ஒரு பரிந்துரையாக அளிக்கலாம்.
அந்தந்த மாநில அரசுகள் விவசாயிகளுடன் பேசி, தேவைக்கு ஏற்ப திருத்தம் செய்து, அமல்படுத்தலாம். அதுவே, நாடு முன்னோக்கி செல்வதற்கான வழி. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE