சென்னை: புற்றுநோய் பாதிப்பில் இருந்து ஏழைகளை மீட்பதற்காக வாழ்நாள் முழுவதும், தன்னலமற்ற சேவை வழங்கிய புற்றுநோய் மைய தலைவர் டாக்டர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சாந்தாவின் அஸ்தி, மருத்துவமனைகளில் தூவிவிட்டு, கடலில் கரைக்கப்பட்டது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா, 93, உடல்நலக்குறைவால், சென்னை தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம்(ஜன.,19) உயிரிழந்தார். அவரது உடல், சென்னை அடையாறு, காந்தி நகர் பகுதியில் உள்ள, பழைய புற்றுநோய் மருத்துவமனையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அரசியல் கட்சியினர், டாக்டர்கள், நர்சுகள், இதர பணியாளர்கள், பொது மக்கள், அவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்தோர் என ஆயிரகணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.மாலையில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது அஸ்தி, நேற்று(ஜன.,20) காலை, இரண்டு புற்றுநோய் மருத்துவமனை வளாகங்களிலும், பொது மக்கள் கால்படாத இடங்களில், தூவப்பட்டது.அதன் பின் மீதமிருந்த அஸ்தி, பெசன்ட் நகர் கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

சிகிச்சை மட்டுமின்றி நம்பிக்கையும் அளித்தார்
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2002 ல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றேன். டாக்டர் சாந்தாதான் எனக்கு சிகிச்சை அளித்தார். அவரது சிகிச்சையுடன் நம்பிக்கையும் அளித்தார். " ஆரம்ப நிலையிலேய சிகிச்சைக்கு வந்துள்ளாய் ; பயப்பட வேண்டாம் விரைவில் குணமடைந்து விடுவாய், எதைபற்றியும் கவலைப்படாதே" என்ற அவரது நம்பிக்கை என்னை பூரணமாக புற்று நோயில் இருந்து வெளியே வர உதவியது. தற்போது நான் பிறருக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். என்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்து தன்னலமற்ற சேவை அளித்த டாக்டர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
கிரேஷ் வர்கீஷ் ,62,
சென்னை.
தன்னலமற்ற சேவை !
இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமியால், 12 படுக்கைகளுடன் துவங்கப்பட்டு, தற்போது, இரண்டு மருத்துவமனைகளாக தரம் உயர்ந்துள்ளது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. இதற்கு, டாக்டர் சாந்தாவின் தன்னலமற்ற சேவை மற்றும் எளிமை மிகவும் முக்கியம். அவருக்கு இதுவரை, மத்திய அரசு, 'மகசேசே, பத்மஸ்ரீ, பத்மவிபூஷன்' விருதுகளை வழங்கி, கவுரவித்துள்ளது. தமிழக அரசின் அவ்வையார் விருது உட்பட, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கு, இந்தியாவின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என, பிரபல புற்றுநோய் டாக்டர்கள் முதல், பல்வேறு தரப்பினர், மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, அனைத்து டாக்டர்கள் சங்கத்தினர் கூறியதாவது: டாக்டர் சாந்தா நினைத்திருந்தால், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையால், ஒரு செல்வந்தராக வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு சேவை செய்திட அர்ப்பணித்து விட்டார். அவரின் இறுதி மூச்சு வரை, மிக எளிமையாக வாழ்ந்தவர்.

டாக்டர்களிடம் அவர் பேசுகையில், 'நோயாளிகளை மனிதர்களாக கருதுங்கள்; மனிதர்களாக நடத்துங்கள்; அவர்கள் பல சரக்கு பொருட்கள் அல்ல' என அடிக்கடிக் கூறுவார்.புற்றுநோய் குறித்து, எவ்வித ஆராய்ச்சிகள் நடந்தாலும், கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும், அதை அறிந்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்வதில், தனியாத ஆர்வம் காட்டினார்.புகையிலை பழக்கத்தில் இருந்து மக்களை மீட்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இதுபோன்ற, தன் வாழ்நாளை பொதுமக்களுக்கு சேவை செய்வதில் கழித்த அவருக்கு, மத்திய அரசு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE