செங்கல்பட்டு: திமுக என்பது கட்சியல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி எனவும், அதற்கு சேர்மன் ஸ்டாலின் எனவும் முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு முதல்வர் பழனிசாமி இன்று (ஜன.,21) பிரசாரத்தை துவக்கினார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான். அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் ஒரு அராஜக கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என நினைத்து பாருங்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். ஸ்டாலினின் மகன் உதயநிதி, காவல் அதிகாரியையே மிரட்டுகிறார். அப்படி இருக்கையில் சாதாரண மக்களின் நிலை என்ன என புரிந்து கொள்ளுங்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் வாழ்ந்த காலம் தமிழகத்தின் பொற்காலம். அவர்களின் வழியிலேயே இந்த ஆட்சியை சிறப்பாக நடத்திவருகிறோம். நான் விவசாயி என்று சொன்னால் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தின் நலனுக்காக, வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை டில்லிக்கு சென்று நேரில் சந்தித்தேன். ஆனால், குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வேண்டுமென்றால் மட்டுமே கருணாநிதி டில்லி செல்வார்.

தமிழக மக்களின் நலன்களுக்காக எந்தவொரு திட்டத்தையும் திமுக ஆட்சியில் செயல்படுத்தவில்லை. குடும்பத்தினர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவியை கொடுக்கின்றனர். அது கட்சியல்ல கார்ப்பரேட் கம்பெனி. அதற்கு ஸ்டாலின் தான் சேர்மன். சொத்துகளை காப்பாற்றிக் கொள்ளவே திமுக.,வினர் பதவியை தேடி அலைகின்றனர். பெண் குலத்தை இழிவாக பேசிய மகனை கண்டிக்காதவர் தான் ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE