சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு மாதமே உள்ள நிலையில், அவசரமாக டெண்டர்கள் விடப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் ஒரே ஆட்சி அதிமுக ஆட்சிதான் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் பழனிசாமியின் பொறுப்பில் உள்ள நீர் வள ஆதாரத்துறையில் கடைசி நிமிட வசூல் வேட்டைக்காக நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்றே மாதங்களில் ரூ.2,855 கோடிக்கு மேல் டெண்டர்களை விட்டிருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு மாதமே எஞ்சியிருக்கின்ற சூழலில், டெண்டர் விடும் அதிகாரிகளும், துறைச் செயலாளர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவது ஏன்? கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் ஒரே கேடுகெட்ட ஆட்சி அதிமுக ஆட்சிதான்.

முதியோர் நிதியுதவி, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சம்பளம் கொடுக்கப் பணமில்லை. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிப்பயன்களைக் கொடுக்க நிதியில்லை. கொரோனா, நிவர் புயல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கக் கூட நிதியில்லை. ஆனால் டெண்டர்களுக்கு நிதி ஒதுக்குவதில் தயக்கமும் இல்லை, கூச்சமும் இல்லை. திமுக ஆட்சி அமைந்தவுடன் டெண்டர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரத்து செய்யப்படும். தவறு செய்தோர் யாராயினும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE