புதுடில்லி: கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சுகாதார பணியாளர்கள் சிலர் தயக்கம் காட்டுவதால் தடுப்பூசிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் ஜன., 16 அன்று இந்தியாவில் தொடங்கப்பட்டது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு முதல் நாளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது வரை 8,06,484 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது சராசரியாக 100-ல் 55 சுகாதார பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி பெறுவதாகவும், 45 பேர் பங்கேற்பதில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அமர்வுக்கு 100 பேர் தேர்வு செய்யப்பட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். அதில் பலர் தயக்கம் காரணமாக வருவதில்லை என்கின்றனர். முதல் நாளில் மட்டுமே 100% இலக்கு பூர்த்திச் செய்யப்பட்டதாக அமராவதி மாவட்ட சுகாதார அதிகாரி மருத்துவர் திலீப் கூறியுள்ளார். ஒரு கோவிஷீல்டு குப்பி என்றால் 10 பேருக்கும், கோவேக்சின் குப்பி என்றால் 20 பேருக்கும் தடுப்பூசி செலுத்தலாம். குப்பியை திறந்த 4 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே திட்டமிட்டு அதற்கேற்ப தடுப்பூசி குப்பிகள் தரப்படுகின்றன. ஆனால் பலர் வராமல் போவதால் தடுப்பூசிகள் வீணாவதாக கூறுகின்றனர்.

இதன் காரணமாக தடுப்பூசிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், விருப்பமுள்ள சுகாதார பணியாளர்களும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வகையில் டிஜிட்டல் தளத்தில் மாற்றம் செய்தனர். இதன் மூலம் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்திருப்பதாக அரசின் ஆரம்பகட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியும் இலக்கு பூர்த்தியாகவில்லை என்றால் பொது மக்களுக்கும் தடுப்பூசி வழங்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இப்பிரச்னை தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தடுப்பூசி இயக்கத்தை பல தன்னார்வலர்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “ஏற்கனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளோம், எந்தவொரு குப்பியும் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்கிறோம். வராதவர்களின் தடுப்பூசி வேறொரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது.” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE