பெங்களூரு: உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, ஜெயலலிதாவின் தோழி சசிகலா(66), விக்டோரியா மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் சோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். சக்கர நாற்காலியில் சென்ற போது தனது ஆதரவாளர்களை பார்த்து கையசைத்தார். பின்னர், அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கபட்ட சசிகலா, வரும் 27 ல் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறை நிர்வாகம் அறிவித்தது.
நேற்று முன்தினம்(ஜன.,19) அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. நேற்று மாலை, அவருக்கு காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் அதிகமானதால், உயர் சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையிலும், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில், பவுரிங் அரசு மருத்துவமனையில் இருந்து, விக்டோரியா மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவமனையில் அவர் இன்னும் 3 நாட்கள் வரை தங்க வைக்கப்படுவார் என தெரிகிறது. மருத்துவமனையில் இருந்து கிளம்பும் போது, அங்கு அவரை பார்ப்பதற்காக கூடியிருந்தவர்களை நோக்கி கையசைத்துவிட்டு கிளம்பி சென்றார்.
சசிகலாவுடன் வக்கீல்கள்
பெங்ளூரூ சிட்டி மார்கெட் அருகே விக்கேடாரியா மருத்துவமனை உள்ளது. இங்கு அனைத்து வசதிகளும் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது சசிகலா 2வது மாடியில் உள்ளார். அவருடன் 4 வக்கீல்களும் உள்ளனர். இந்த மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களில் விமர்சனம்
சசிகலா வரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். அதற்கு முன்பே அவரை சிகிச்சை என்ற பெயரில் வெளியே கொண்டுவருவதற்காக இந்த நாடகம் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இப்படி பதிவிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE