புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக 3 அல்லது 4 நாட்களில் மாநில கவர்னரே முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், கடந்த 1991ம் ஆண்டு தமிழகம் வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு பேரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவா்களின் கருணை மனுவில் முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014-ல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மேலும் கடந்த 2018ல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு கனர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‛தமிழக கவர்னருக்கு 2015ல் அனுப்பிய கருணை மனு மீதும், 2018ல் அமைச்சரவையின் தீர்மானம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவெடுத்து விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்,' என கோரியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய விசாரணையில், பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தான் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று திடீர் திருப்பமாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இன்றைய விசாரணையில், ‛ஜனாதிபதிக்குப் பதிலாக மாநில கவர்னரே 3 அல்லது 4 நாட்களில் முடிவு செய்வார்,' என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE