புனே: கோவிஷீல்டு கொரானா தடுப்பு மருந்து தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி துவங்கிவிட்டதால் மருந்து தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீப்பிடித்துள்ளது.

இதனால், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேறினர். தீ விபத்தால், சீரம் அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து, வந்து கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் கோவிஷீல்டு மருந்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவத்தில் 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனவாலா கூறுகையில், எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சில தலங்கள் சேதம் அடைந்துள்ளது. மற்றபடி உயிரிழப்போ அல்லது பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. தீவிபத்து காரணமாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது என அரசுக்கும், பொது மக்களுக்கும் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE