புதுடில்லி: அமெரிக்காவின் புதிய அதிபராக நேற்று (ஜன.,20) ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றனர். இந்த விழா அமெரிக்கா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. ஜோ பைடனுக்கு பலர் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலினாய் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். முந்தைய டொனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது புண்பட்டிருந்த அமெரிக்காவை தற்போது ஜோ பைடன் சரி செய்வார் என்று நம்புகிறோம் என காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட அமெரிக்க தொழில்துறையை ஜோ பைடன் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவார் என நம்புகிறோம் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பதவியேற்பின்போது வெள்ளை மாளிகைக்கு வர இயலாத காங்கிரஸ் உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தங்களது மாகாணங்களில் இருந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். கலிபோர்னியாவின் புகழ்பெற்ற அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னா, அமி பேரா, பமீலா ஜெயபால் உள்ளிட்டோர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்திய பூர்வீகம் கொண்ட நீரா டாண்டன் என்பவர் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் நிர்வாக இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறாக இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ஜோ பைடன் அரசு தங்கள் ஆட்சியில் முக்கிய பதவிகளையும் வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்துள்ளது. இதனால் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் விளங்குகிறார் என்று கூறினால் அது மிகையல்ல.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE