வாஷிங்டன் :அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, 15 உத்தரவுகளில் கையெழுத்திட்டு, ஜோ பைடன் அசத்தியுள்ளார்.
அமெரிக்காவின், 46வது அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், நேற்று முன்தினம் பதவியேற்றார். ஏற்கனவே அறிவித்தபடி, பதவியேற்ற உடனேயே, 15 முக்கிய உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.அதில் பெரும்பாலானவை, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த பல உத்தரவுகளை ரத்து செய்வதாக அமைந்துள்ளன.
பருவ நிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான உத்தரவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது தொடர்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள், அமெரிக்காவுக்கு வருவதற்கான தடையை நீக்குவது; மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டத்தை கைவிடுவது, என, 15 உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
அடுத்த, 100 நாட்களுக்கு அமெரிக்க மக்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணியும் சவால் விடும் உத்தரவே, ஜோ பைடன் கையெழுத்திட்ட முதல் உத்தரவாக அமைந்துள்ளது.
இது குறித்து, ஜோ பைடன் கூறியதாவது:இந்த உத்தரவுகளில் கையெழுத்திட்டதில் பெருமை அடைகிறேன். அடுத்து வரும் நாட்களில் மேலும், பல உத்தரவுகள் கையெழுத்தாக உள்ளன. விசா முறைகளை எளிமையாக்கும் மசோதாவும் பார்லி.,யின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பொருளாதாரத்தை மீட்பது, இனபாகுபாட்டை ஒழிப்பது என, முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணையும், ஜோ பைடனின் உத்தரவுக்கு, ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
டிரம்புடன் பேச விருப்பம்
அமெரிக்க மரபு படி, பதவியில் இருந்து விலகும் அதிபர், புதிய அதிபருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதுவார். அது, ஓவல் அலுவலகத்தில், அதிபரின் மேஜை மீது வைக்கப்படும்.பல்வேறு மரபுகளை, டொனால்டு டிரம்ப் மீறியுள்ளதால், கடிதம் எழுதியிருக்க மாட்டார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜோ பைடனுக்கு அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து, பைடன் கூறியுள்ளதாவது: இது தனிப்பட்ட முறையிலான கடிதம். அதில் எழுதப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்க முடியாது. மிகவும் தாராளமனதுடன், பாராட்டக் கூடிய கடிதத்தை டிரம்ப் எழுதியுள்ளார். அவருடன் பேசுவதற்கு விருப்பமுள்ளது. விரைவில் பேசுவேன். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE