தமிழக மீனவர்கள் 4 பேரை அடித்து கொன்ற இலங்கை வீரர்கள் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 4 பேரை அடித்து கொன்ற இலங்கை வீரர்கள்

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (28)
Share
ராமேஸ்வரம் :நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேரை இரும்பு தடியால் கொடூரமாக அடித்து கொலை செய்த இலங்கை கடற்படை வீரர்களை கைது செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் ஜன.,24ல் ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட உள்ளனர்.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா 30, மண்டபம் முகாம் இலங்கை அகதி சாம் 28, உச்சிப்புளி நாகராஜ் 52, செந்தில்குமார் 32 ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம்
தமிழக மீனவர்கள், கொலை, இலங்கை வீரர்கள்

ராமேஸ்வரம் :நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேரை இரும்பு தடியால் கொடூரமாக அடித்து கொலை செய்த இலங்கை கடற்படை வீரர்களை கைது செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் ஜன.,24ல் ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட உள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா 30, மண்டபம் முகாம் இலங்கை அகதி சாம் 28, உச்சிப்புளி நாகராஜ் 52, செந்தில்குமார் 32 ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து ஜன.18ல் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். அன்று மதியம் 2:00 மணிக்கு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.


வயர்லெசில் கதறல்இலங்கை வீரர்கள் எஸ்.எல்.என்., என்ற ரோந்து கப்பலில் படகை கட்டினர். கடல் சீற்றத்தால் படகின் இரும்பு கேன்ட்ரி உரசி கப்பல் சேதமானது. ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் இரவு 11:00 மணிக்கு மற்றொரு ரோந்து கப்பல் மூலம் வேண்டுமென்றே 3 முறை மோதி படகை மூழ்கடித்தனர்.படகில் இருந்த 4 மீனவர்களும் வயர்லெஸ் கருவியில், ''16வது சேனலில் எங்கள் படகு மீது இலங்கை நேவி கப்பல் மோதுகிறது. உயிருக்கு ஆபத்து எங்களை காப்பற்றுங்கள்'' என தொடர்ந்து குரல் எழுப்பினர். உதவி கிடைக்காத நிலையில் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் மீட்ட இலங்கை வீரர்கள் கயிற்றில் கட்டி இரும்பு தடியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

அந்தபகுதியில் மீன்பிடித்து ஜன.,19ல் கரை திரும்பிய கோட்டைபட்டினம் மீனவர்கள் கூறுகையில், ''மீனவர்களின் குரல் எங்களது வயர்லெஸ் கருவியில் கேட்டது. ஆனால் இலங்கை வீரர்களின் கொலை வெறிக்கு பயந்து மீட்க செல்லவில்லை'' என வருத்தப்பட்டனர்.ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், ''மீனவர்களை அடித்து கொலை செய்ததற்கு ஆதாரமாக அவர்களது உடலில் ரத்த கறை உள்ளது. கடலில் மூழ்கி இருநாட்களுக்கு பின் மீட்டால் ரத்தகறை இருக்காது. உடலில் தோல் உரிந்து காணப்படும். இது திட்டமிட்ட படுகொலை'' என்றனர். இதனை மத்திய, மாநில உளவுத்துறை உறுதிப்படுத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சேசு கூறுகையில், ''கொலையை மறைக்க மீனவர்கள் கடலில் மூழ்கியதாகவும், ஜன.,20 மாலை 5:00 மணிக்கு இரு உடலும், ஜன.,21 மதியம் 1:00 மணிக்கு இரு உடலும் மீட்டதாக இலங்கை வீரர்கள் நாடகமாடுகின்றனர். ஜன.,20ல் மீட்டதாக கூறும் மீனவர் உடலில் ரத்தகறை, காயம் உள்ளது. இதுவே கொலைக்கு சாட்சி. இலங்கை வீரர்கள் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் இருநாடு அதிகாரிகள் முன்னிலையில் மீனவர்களின் உடற்கூறாய்வு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும். கச்சத்தீவு அருகே மீன்பிடி உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் ஜன.,24ல் சாலை மறியல் நடக்கும்'' என்றார்.----

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X