பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம் : ஜன-.24 தேசிய பெண் குழந்தைகள் தினம்| Dinamalar

பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம் : ஜன-.24 தேசிய பெண் குழந்தைகள் தினம்

Added : ஜன 21, 2021 | கருத்துகள் (1)
Share
“மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா.....” என்ற கவிமணியின் வரிகளும் “சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாரதியின் வரிகளும் பெண் குழந்தைகளின் சிறப்பையும், ஆளுமையையும் எடுத்துச் சொல்கின்றன. சமூகத்தின் பெண் குழந்தைகளின் உரிமையும், சமவாய்ப்பும் உறுதி செய்யும் பொருட்டு, 2008 ஜனவரி 24 முதல் தேசிய பெண்
 பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம் : ஜன-.24 தேசிய பெண் குழந்தைகள் தினம்

“மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா.....” என்ற கவிமணியின் வரிகளும் “சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாரதியின் வரிகளும் பெண் குழந்தைகளின் சிறப்பையும், ஆளுமையையும் எடுத்துச் சொல்கின்றன.

சமூகத்தின் பெண் குழந்தைகளின் உரிமையும், சமவாய்ப்பும் உறுதி செய்யும் பொருட்டு, 2008 ஜனவரி 24 முதல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.ஆயிரம் கவிஞர்கள் பெண்ணியம் பேசினாலும், பல்வேறு தடைகளைத் தாண்டியே பெண்கள் சமனிலை பெற வேண்டியிருக்கிறது. கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று ஆலாய்ப் பறக்கும் பெற்றோர்கள் இப்போது இல்லை. பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொண்டாடும் இளம் தலைமுறை பெற்றோர்களால் சமூகம் மாறத் தொடங்கி இருக்கிறது.எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்ற கூக்குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டது. மலரினைப் போன்ற மென்மையான தேகத்தில், வலிமை யான, உறுதியான எண்ணங்கள் எழத்தொடங்கிவிட்டன. அநீதிகளையும், சமூக அவலங்களையும் எதிர்த்து நிற்கும் சிங்கப்பெண்களாக கர்ஜிக்கத் தொடங்கி விட்டனர். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்” என்று தன்னை காத்துக் கொள்ளும் வேட்டைக்காரியாக மாறிவிட்டார்கள்.


கல்வியில் சிறந்த பெண்கள்“கல்வி அறிவிலா பெண்கள் களர்நிலம். அந்நிலத்தில் புற்கள் விளைந்திடலாம். நல்ல புதல்வர்கள் விளைவதில்லை” என்ற பாரதிதாசன் சொன்ன வரிகள் இப்போது பொய்த்து போகும் அளவிற்குப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். பிறந்தவுடன் கள்ளிப்பாலும், கருக்காய் நெல்லும் கொடுத்து அழித்த பிசாசுகள் ஒழிந்து விட்டனர். பெண் குழந்தைகளை தாயே! என்றும் அம்மா என்றும் ராஜா என்றும் அழைக்கும் இளம்தலைமுறைப் பெற்றோர்கள் பெருகிவிட்டனர்.“தெய்வத்தின் வரத்தால் ஆண் குழந்தை பெற்றேன்” என்பது அந்தக்காலம். “தெய்வமே எனக்கு மகளாக கிடைத்திருக்கிறாள் என்று துள்ளிக்குதிப்பது” இந்தக்காலம்.

பிஞ்சு விரல்களின் ஸ்பரிசம், மார்பினில் படுத்துறங்கும் மகிழ்ச்சி, தோளைக்கட்டிக்கொண்டு முத்த மிடல், இதைவிட வேறென்ன வேண்டும்? இயந்திரத்தனமாய் உருண்டோடும் வாழ்க்கையில் இதமான மருந்தே பெண் குழந்தையின் புன்னகையல்லவா? குழந்தை யின் தோளிலும், மார்பிலும்கட்டிக் கொண்ட பெண் குழந்தைகள், பெற்றோர்களை முதுமையில் பராமரிக்கும் தாயும் ஆகிறாளே! ஆண் பிள்ளைகளால் சுமையென இறக்கிவிடப்பட்ட எத்தனையோ பெற்றோர்களை பெண் மக்களே கவனிக்கிறார்கள் என்பது சமுதாயத்தில் கண்ணாடியாகத் தெரிகிறது.
இல்லத்தேரின் அச்சாணிபெண் குழந்தைகள் இல்லத்திற்கு அச்சாணியாக இருந்து, மகிழ்ச்சியையும், அன்பையும் உருவாக்கும் நீருற்றுகளாக இருக்கிறார்கள். குடும்ப வறுமையைப் போக்குவதில், அப்பாவிற்கு தோளோடு தோளாக நின்று வேலைக்கு செல்லக்கூடிய பெண்களும் இருக்கிறார்கள். பெண்கள் இல்லாத வீட்டில் லட்சுமி தங்க மாட்டாள் என்று சொல்வார்கள். பெண் குழந்தைகள் இல்லாத இல்லத்தில், இல்லத்தரசியின் பாடு திண்டாட்டம் தான். எனக்கொரு மகள் இருந்தால் ஒத்தாசையாக உதவியாக இருப்பாளே என்ற புலம்பல்களை கேட்டிருக்கிறோம். கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர்களை அனுப்பிவிட்டு, தம்பி, தங்கைகளுக்கு சமையல் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அதன்பின் வேலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.உழைத்து அலுத்து சோர்வாய் வரும் தகப்பனைப் பார்த்து 'ஏம்ப்பா.... உடம்பு சரியில்லையா? காபி போட்டு தரட்டுமா?' என்று கேட்கும் பெண் குழந்தைக்கு மேல் இந்த உலகத்தில் வேறு என்ன இருக்கப் போகிறது.


புதுமைப்பெண்கள்“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார். வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போமென்றவிந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”என்ற முண்டாசுக்கவிஞரின் வரிகள், பெண் குழந்தைகளை சுதந்திரமாகவும், சிங்கப்பெண்களாகவும், உலகை வலம் வரச்செய்கின்றன.“குரலை உயர்த்திப் பேசாதே கண்களை நிமிர்த்திப் பார்க்காதே!காலை வீசி நடக்காதே! சத்தம் போட்டு சிரிக்காதே!பெண்ணாய் அடக்கமாய் இரு!என்ற அறிவுரைகளுடன் வளரும் பெண் குழந்தைகள் தைரியமற்றவர்களாய் தவறுகளை தட்டிக்கேட்கும் துணிச்சலற்று வீட்டிற்குள் முடங்கிப் போகிறார்கள். அந்தத் தலைமுறை மாறி புதிய தலைமுறை புரட்சிகர எண்ணங்களுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது.'அச்சமும் நாணமும், நாய்களுக்கு வேண்டுமாம்' என்ற பாரதியின் வரிகள் பெண் குழந்தைகள் புதுமைப்பெண்களாக மாற வேண்டும் என்பதைக் காட்டுகிறது. ஒளவையார் முதல் கல்பனாசாவ்லா வரை இந்தியாவில் பெண்கள் அரியதொரு சாதனைப் படைத்து மாதர்குல மாணிக்கங்களாக திகழ்கின்றனர்.


பெண் குழந்தைகள் பாதுகாப்புமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் நாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அவரால் அறிமுகம் செய்யப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகளின் விகிதாச்சாரத்தை அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளை உடல், மனம், சமூக ரீதியாக பாதுகாக்கவும், தன்னம்பிக்கை ஊட்டவும், மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட சட்டமே போக்சோ. பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்க இயற்றப்பட்டது.

இச்சட்டம் அதிகம் பயன்படுத்தும் இந்திய மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இச்சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனைகள் விதித்த போதும், நாள்தோறும் 109 பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் கூறுகிறது.இந்தளவிற்கு குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் மனிதனை மிருகமாக்கும் மதுவே என்றும் கூறலாம். நாட்டில் 2018ல் 21 ஆயிரத்து 605 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1457 பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஆறுமடங்கு அதிகரித்துள்ளது. கைக்கு எட்டிய தூரத்தில் ஆபாச படங்கள் சமூகவலைத்தளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.


பெண் குழந்தை தொழிலாளர்கள்இந்தியாவில் 15 முதல் 19 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளில் 45 சதவிகிதம் பேர் போதிய உடல் வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றனர். 54 சதவிகிதம் பெண் குழந்தைகள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். 27 சதவிகிதம் பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் முன்பே திருமணம் நடந்து விடுகிறது. 8 சதவிகிதம் பெண் குழந்தைகள் 18 வயது பூர்த்தியடையும் முன்பே தாய்மை அடைந்து விடுகின்றனர்.

இந்தக்காரணிகள் நாட்டின் ஒட்டு மொத்த மனித வளத்தையே பாதிக்கின்றன. நாட்டின் 30 சதவீதத்திற்கு அதிகமானோர் வறுமை நிலையில் உள்ளதால், பள்ளி செல்லாமல் வேலைக்கு செல்லும் பெண் குழந்தைகள் அதிகமாக உள்ளனர்.ஜாக்கெட் தைக்கும் பெண்கள் முதல் ராக்கெட்டில் செல்லும் பெண்கள் வரை அனைவரும் தன்னம்பிக்கை கொண்டே சிங்கங்களாக மாறிவருகின்றனர். மது அருந்தினான் என்பதற்காக, மணமேடையில் மணமகனை வேண்டாமென்று தூக்கி எறிந்த பெண்கள் இருக்கிறார்கள். முதுமையில் இருக்கும் “என் பெற்றோர்களை நான்தான் பராமரிப்பேன்” என்று மணமகனிடம் சொல்லக்கூடிய துணிச்சல் இன்றைய பெண்களுக்கு உண்டு. குடும்ப வாழ்க்கையில் தனக்கும், தனது குடும்பத்தார்க்கும் அவமானம் என்றால் கணவனை தட்டிக்கேட்கும் பெண்கள் வளர்ந்து வருகிறார்கள்.

“கற்பு நெறியென்று சொல்ல வந்தால் - அதை இருகட்சிக்கும் பொதுவில் வைப்போம்” என்ற பாரதியின் வரிகளைப் பின்பற்றி தவறு செய்யும் ஆண்களை தூக்கி எறியவும் தயங்காத பெண்களும் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளைப் போற்றுவோம்! புதிய உலகைப் படைப்போம்.-ச.மாரியப்பன், ஆசிரியர்அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகம்பம். 94869 44264

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X