சென்னை :''அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள், புதுப்புது உத்திகளை கையாண்டு, கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம், பிரசாரம் செய்தார்.
சிங்கபெருமாள் கோவில் பகுதியில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: ஜெயலலிதா, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச, இளைஞர், இளம்பெண்கள் பாசறையை துவக்கினார். அதன் காரணமாக, 2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றோம். அ.தி.மு.க.,வில் தான் சாதாரண மனிதன் கூட, உயர்ந்த பதவிக்கு வர முடியும்.இங்கே இருக்கிற, தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர்கள், எதிர்காலத்தில் எம்.எல்.ஏ.,வாக, எம்.பி.,யாக, அமைச்சராக வரலாம். முதல்வராக கூட வரலாம். நான் அப்படி தான் முதல்வராகி இருக்கிறேன். உங்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. உங்களை உயர்ந்த பதவிக்கு கொண்டு வர, கட்சி எப்போதும் துணை நிற்கும்.
இன்றைய சூழ்நிலையில், ஆட்சி மாற்றத்தை உருவாக்குவது, இளைஞர்கள் தான். அப்படிப்பட்ட இளைஞர்கள், அதிக அளவு கட்சியில் இருப்பது பெருமைக்குரியது.இது, விஞ்ஞான உலகம். தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள், புதுப்புது உத்திகளை கையாண்டு, கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஜெ., அரசு மீண்டும் அமைய, உங்களுடைய பங்கு மிக மிக முக்கியம்.அ.தி.மு.க., அரசின் திட்டங்களை, மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். இந்த தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை, நாம் பெற வேண்டும்.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., ஆட்சி குறித்து, மக்களிடம் பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றன. அதை, உங்கள் திறமையால் வெல்ல வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE