புதுடில்லி: கொரோனா தடுப்பு மருந்தான, 'கோவிஷீல்டு' தயாரிக்கும், புனேயில் உள்ள, 'சீரம் இந்தியா' நிறுவனத்தில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், கருகிய நிலையில், ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தடுப்பு மருந்து தயாரிக்கும் இடத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
* மத்திய பிரதேசத்தில், 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற உறவினர்கள், 25 வயது மதிக்கத்தக்க இரண்டு பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
* மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சமோர்ஷி என்ற இடத்தில், விஷ சாராயம் குடித்த, 10 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையின் போது, இருவர் உயிரிழந்தனர். எட்டு பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
* மத்திய பிரதேசத்தின் போபாலில், உள்ளூர் செய்தித்தாள் நடத்தி வருபவர் பியாரே மியா, 68. இவர், ஐந்து சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த ஆண்டு கைதானார். இவரால் பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமியரும், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதில், இரண்டு சிறுமியருக்கு, சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு சிறுமி, அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரை சாப்பிட்டது தெரியவந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், நேற்று முன்தினம், சிறுமி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
* போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான, கன்னட நடிகை ராகினி திவேதிக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.
* பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பத்திரிகையாளர்களுக்கு அளிக்கும் பேட்டிகளில், தன்னைப் பற்றி தவறான கருத்துக்கள் தெரிவிப்பதாக, கவிஞரும், எழுத்தாளருமான ஜாவித் அக்தர், அவதுாறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகை கங்கனாவுக்கு, மும்பை போலீசார், 'சம்மன்' அனுப்பியுள்ளனர்.

உலக நிகழ்வுகள்:
* ஈராக் தலைநகர் பாக்தாதில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், அடுத்தடுத்து நடந்த, இரண்டு மனித வெடிகுண்டு தாக்குதல்களில், 32 பேர் பலியாகினர்.
* பிலிப்பைன்ஸில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
* பாகிஸ்தானில் கன்னி வெடியில் சிக்கிய 4 ராணுவ வீரர்கள் பலியாயினர்.
தமிழக நிகழ்வுகள்:
* திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
* நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேரை இரும்பு தடியால் கொடூரமாக அடித்து கொலை செய்த இலங்கை கடற்படை வீரர்களை கைது செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் ஜன.,24ல் ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட உள்ளனர்.
* இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் வீட்டில் பதுக்கிய ரூ.2.60 கோடி கஞ்சா பறிமுதல் வழக்கில் நேற்று மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
* ஆன்லைன் டிரேடிங்' மோசடி வழக்கில், நாகர்கோவிலில் கைதான நபர், கோவை உட்பட பல மாவட்டங்களில், 40 கோடி ரூபாய்க்கும் மேல் சுருட்டியது தெரியவந்துள்ளது.
* ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தீப்பிடித்ததில், ஆவணங்கள், நாற்காலி, மேஜை, மின் விசிறி, பிரிண்டர், கம்ப்யூட்டர்கள் கருகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE