உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
எஸ்.ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முக்கியமான ஒரு விஷயத்தை, மறக்காமல் திரும்பத் திரும்ப உறுதிபடக் கூறி வருகிறார்.அதாவது, 'தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும், விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்' என, வாக்குறுதி அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த மூன்று வகை கடன்கள் தவிர தமிழக மக்கள், 'டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், டூ - வீலர்' மற்றும் வீடு கட்ட என, விதவிதமாக கடன் வாங்கியுள்ளனர்.நகை, விவசாயம், கல்விக் கடன் வாங்கியோர் மட்டும் ஓட்டு போட்டு, தி.மு.க., வெற்றி பெற முடியாது.மேலும், பிற கடன் வாங்கியுள்ளோருக்கு, இந்த அறிவிப்பு ஒரு வித வெறுப்பையும், கோபத்தையும், தி.மு.க., மீது ஏற்படுத்தும்; அதன் விளைவாக அவர்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு போடமாட்டார்கள்.

எனவே, நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், ஸ்டாலின் வாக்குறுதி அளிக்க வேண்டும்.'தமிழக மக்கள் மளிகைக் கடை, மார்வாடி, பைனான்சியர், பால்காரர் என, எங்கு கடன் வைத்திருந்தாலும், அனைத்தையும் தள்ளுபடி செய்வோம்' என, அறிவிக்க வேண்டும். பாமர ஏழை முதல் தொழிலதிபர் வரை, அனைவரது கடன்களையும், அது எத்தனை லட்சம் கோடி ரூபாயாக இருந்தாலும், 'அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்' என அறிவிப்பதே, தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கும்.
அப்படியே, 'தமிழக அரசு, உலக வங்கியில் வாங்கியிருக்கும், 5 லட்சம் கோடி ரூபாய் கடனும் தள்ளுபடி செய்யப்படும்' என, வாக்குறுதி அளித்து தன், 'பொருளாதார அறிவை' வெளிப்படுத்த வேண்டும். தாமதிக்காமல் இந்த வாக்குறுதியை வழங்கினால், கஷ்டப்பட்டாலும், கடன் வாங்காமல் குடும்பம் நடத்தும் மக்களும் உடனடியாக கடன் வாங்கி, பயனாளிகள் பட்டியலில் தங்களையும் இணைத்து கொள்வர். ஆக, அடுத்த பிரசார கூட்டத்தில் இருந்து, அதையும் சொல்லி விடுங்கள், ஸ்டாலின்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE