புதுடில்லி: ''ஆசிய பிராந்தியத்தில், இந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருவதற்கேற்ப, சவால்களும் அதிகரித்து வருகின்றன,'' என, முப்படை தலைமை தளபதி எம்.எம்.நரவானே தெரிவித்து உள்ளார்.
டில்லியில், ராணுவம் மற்றும் தொழில் துறையின் கூட்டுப் பயிலரங்கம் நடந்தது. இதில் பங்கேற்ற, தலைமை தளபதி எம்.எம்.நரவானே பேசியதாவது: கடந்த ஆண்டு, கொரோனா தாக்கம் மற்றும் வடக்கு எல்லையில் சண்டை என, இரு பெரும் சவால்களை நாடு சந்தித்தது. அண்டை நாடுகளுடன் தீர்க்கப்படாத எல்லை பிரச்னைகளால், போர்கள் நடந்தன.

தற்போது நம் அண்டை நாடுகள், பாரம்பரிய போருக்கு பதிலாக, பினாமி நாடுகள் மூலம் சண்டையிடுகின்றன. இடதுசாரி பயங்கரவாதம், எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். தெற்காசியாவில் சர்வதேச அதிகார மையமாக, இந்தியா உருவெடுத்து வருகிறது. நம் வலிமையும், செல்வாக்கும் உயர்ந்து வருவதற்கேற்ப, பாதுகாப்பு தொடர்பான சவால்களும் அதிகரித்து வருகின்றன.
அவற்றை சமாளிக்க, ராணுவத்தை நவீன மயமாக்குவது மிகவும் இன்றியமையாதது. அதனால், உள்நாட்டு ராணுவ தளவாட தொழிலில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அதிகம் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம், நம் ராணுவத்தின் ஆற்றல் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE