அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட, அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை காண்பித்து தான், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
'உங்களைப் போன்றவர்களால் தான், இந்த அரசு இன்னும், 'உயிர்ப்புடன்' இருக்கிறது...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.
முல்லைத்தீவு மாவட்டத்தில், தமிழர்களின் கோவில்கள் இருந்த பகுதிகளில் புராதன புத்தர் கோவில்கள் இருந்ததாக பொய் கூறி, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை, ராணுவத்தின் உதவியுடன், இடித்துத் தகர்க்கும் சிங்கள அரசின் செயல்கள், வன்மையான கண்டனத்திற்குரியன- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
'காற்றடைத்த பந்தை தண்ணீருக்குள் அழுத்தினால், வெளியே வந்து தான் தீரும்; இதை, இலங்கை அரசும் அறியும்...' என, கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
தமிழகம் வெற்றிநடை போடுவதாக, அரசு பணத்தில், பொய் விளம்பரம் கொடுக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை இல்லை; முதியவர்களுக்கு உதவித்தொகை இல்லை. எதையும் மத்திய அரசிடம் கேட்டு செய்கின்றனர். இது, பா.ஜ.,வின், 'பினாமி' ஆட்சி.- தி.மு.க., மாநில மகளிரணி செயலர் கனிமொழி

'நீங்கள் இல்லை என்கிறீர்கள்; அவர்கள், இருக்கிறது என்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், மக்களிடம் ஓட்டு இருக்கிறது என்பதால் தான்...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., மாநில மகளிரணி செயலர் கனிமொழி பேட்டி.
விவசாயத்துக்கான இலவச மின்சார உபயோகத்திற்காக, பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய பிரதேச அரசு துவக்கியுள்ளது. இதனால், முறைகேடுகள் களையப்படும். இதுபோல, தமிழகத்திலும் செய்ய வேண்டும்.- பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
.
'நல்ல திட்டம் தான், தமிழக அரசும் செய்யலாம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மாநில, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.
வன்னியர் சமுதாயத்தை ராமதாஸ் ஏமாற்றுகிறார். தேர்தல் பேரம் பேசுவதற்காக, அவர் கையாளும் யுக்தி, இட ஒதுக்கீடு பிரச்னை. இட ஒதுக்கீடு, 69 சதவீதம் நடைமுறையிலுள்ள நிலையில், 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை எங்கிருந்து எடுக்க முடியும்.- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
'முடியாது என்பதை அறிந்து தான், உள் ஒதுக்கீடு என கேட்கிறார்; இதன் மூலம், பிற, ஓ.பி.சி., சமுதாயத்தினரின் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பதால் தான் அரசும் யோசிக்கிறதோ...' என, கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில், தி.மு.க.,வினரே ஆட்களை தேர்வு செய்து, அவர்களுக்கு எழுதி கொடுத்து, அவர்கள் என்ன பேச சொன்னார்களோ, அதை பேச வைக்கின்றனர்.- அமைச்சர் தங்கமணி
'தி.மு.க., போல, அ.தி.மு.க., ஏன் மக்கள் கிராம சபை கூட்டத்தை கூட்டுவதில்லை? புகார்கள் அதிகம் வந்து விடும் என்பதாலா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE