ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி அருகே கஞ்சா விற்பனை செய்த இரண்டு பெண்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா உட்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறிப்பிட்ட சில பகுதிகளில் கச்சிதமாக நடந்து வருகிறது. கஞ்சாவை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் நடக்கும் கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி., அருண் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., பாஸ்கரன் மேற்பார்வையில் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ராஜராஜன், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா, சப் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் ஆரல்வாய்மொழி போலீஸ் சரகத்திற்கு உட்பட பீமநகரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பீமநகரியில் சந்தேகபடும்படியாக ஆட்டோ ஒன்று வந்து நின்றது. இதையடுத்து அந்த ஆட்டோவை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் கருப்பு கலர் சூட்கேஷில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோவில் இருந்த தெற்குதிருப்பதிசாரம் செல்லையா மகன் சந்திரபிரகாஷ் (25), இவரது மனைவி சுதா நாகலட்சுமி (25), மற்றும் இதேபகுதி சம்சுதீன் மனைவி நூர்ஜஹான் (38) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 8 செல்போன்கள், 10 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் 40 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்தமதிப்பு ரூ.10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மதுரையில் இருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக நாகர்கோவில் டி.எஸ்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். திருப்பதிசாரத்தை சேர்ந்த பாலம்மாள் என்பவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. கஞ்சா விற்பதில் அவருக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த நிசாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கஞ்சா விற்பனை செய்த பாலம்மாள் தற்போது வசதியாக வாழ்ந்து வருகிறார். இவர்களது பின்னணி குறித்து கடந்த சில நாட்களாகவே கண்காணித்து வருகிறோம். இதுதொடர்பாக மேற்கொண்ட சோதனையில் இவர்கள் சிக்கியுள்ளனர். இதுபோல சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இரண்டு கிலோ கஞ்சாவுடன் பெண்கள் உட்பட 3பேர் கைது ஆகியுள்ள சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.