சிவமோகா: கர்நாடகாவில் சக்திவாய்ந்த வெடி பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியதில் 8 பேர் பலியாகினர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் சிவமோகா தாலுகா அப்பலகெரே அருகே உள்ளது ஹுனசூரு கிராமம். இந்த கிராமம் அருகே ரயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி உள்ளது. நேற்று (ஜன.,21) இரவு அந்த கல்குவாரிக்கு 50க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. ரயில்வே கிரசர் அருகே சென்ற போது சுமார் 10:20 மணியளவில் அந்த லாரி திடீரென வெடித்துச் சிதறியது. இதில், லாரியில் இருந்த அனைத்து வெடி பொருட்களும் வெடித்து சிதறின.
இந்த விபத்தில், லாரி ஓட்டுனர் மற்றும் லாரியில் பயணித்து வந்த தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். ஓட்டுனர் உள்பட 8 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் என சிவமோகா கலெக்டர் சிவக்குமார் கூறினார். உயிரிழந்தவர்கள் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெடி விபத்து ஏற்பட்ட பின்னர் அண்டை மாவட்டங்களான சிக்மகளூர் மற்றும் உத்தர கன்னடாவில் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

வெடி விபத்து ஏற்பட்ட சிவமோகா பகுதி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் சொந்த ஊர் ஆகும். விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரிக்க எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்., எம்.பி., ராகுல் இரங்கல் தெரிவித்தனர். பிரதமர் மோடியின் இரங்கல் செய்தியில், ‛சிவமோகாவில் ஏற்பட்ட துயரத்தால் வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது,' எனக் கூறியுள்ளார்.
Pained by the loss of lives in Shivamogga. Condolences to the bereaved families. Praying that the injured recover soon. The State Government is providing all possible assistance to the affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 22, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE