வாஷிங்டன்: உய்குர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அமெரிக்காவிலுள்ள சீன தூதரகம் வெளியிட்ட டுவீட் தங்களது கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, தூதரக கணக்கை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
சீனாவில் சிறுபான்மையினர்களான உய்குர் முஸ்லிம் மக்களை அந்நாடு அரசு ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம் மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஐ.நா.,வில் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்த சீனா, பயங்கரவாதத்துக்கு எதிராக போராட பயிற்சியளிப்பதற்காக அம்மக்களை முகாம்களில் தங்கவைத்துள்ளதாக காரணம் கூறியது.

அதேபோல உய்குர் இனத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக, அம்மக்களை கட்டாய கருத்தடை, கருக்கலைப்பு, குடும்ப கட்டுப்பாடு செய்ய சீன அரசு வற்புறுத்துவதாகவும் தகவல் வெளியானது. சீனாவின் இந்த மனித உரிமை மீறலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் சீன தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.
அதில், உய்குர் முஸ்லிம் குடும்ப புகைப்படத்துடன், “பெண்கள் ஒன்றும் குழந்தைகளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரம் அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்புகைப்படத்தில் ஒரு பெண்ணுடன் கணவனும், அவளது நான்கு குழந்தைகளும் காணப்பட்டனர். இந்த கருத்தை ஆழ்ந்து பார்த்தால் உய்குர் மக்களின் மீதான சீனாவின் வன்மம் தெரிவதாக விமர்சனம் எழுந்துள்ளது. கட்டாய குடும்ப கட்டுப்பாடு போன்ற தகவல்களை இந்த டுவீட் உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சீன தூதரகத்தின் இந்த டுவீட்டை மனிதநேயமற்றது என்று விமர்சித்திருக்கும் டுவிட்டர் நிறுவனம், தங்களது கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நீக்கியுள்ளது. சிறுபான்மையினர் மீதான மனிதநேயமற்ற தாக்குதல்களை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என தெரிவித்து சீன தூதரகத்தின் கணக்கை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
ஆனால் தங்களைப் பற்றி தவறான தகவல் பரப்பப்பட்டதால் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சீனா கருத்துக் கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE