கோல்கட்டா: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தன்னை பற்றி பொய் பிரசாரம் செய்வதாக குற்றம்சாட்டியிருந்த மேற்கு வங்க அமைச்சர் ரஜிப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார்.
மே.வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு அரசியல்களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ., இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் பலர் திரிணாமுல்லில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். இது, முதல்வர் மம்தாவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்தும், எம்.எல்.ஏ., பதவியில் இருந்தும் விலகிய சுவேந்து அதிகாரி பா.ஜ.,வில் இணைந்தார். லஷ்மி ரத்தன் சுக்லா அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் விலகியுள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சராக இருந்த ரிஜிப் பானர்ஜி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் நேரலையில் கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பலர், தன் மீது பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்திருந்தார். இது அக்கட்சி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகலுக்கு எந்த காரணமும் அவர் தெரிவிக்கவில்லை.
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள 3வது அமைச்சர் ரஜிப் பானர்ஜி ஆவார். இது திரிணாமுல் கட்சிக்கு புதுக்கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE