புதுடில்லி: வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதார விலை, பொதுக்கொள்முதல் மற்றும் ரேஷன் முறை ஆகிய 3 தூண்களையும் அழித்துவிடும் என காங்., தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் இன்று (ஜன.,22) காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நடக்க இருக்கும் உட்கட்சித் தேர்தல், விவசாயிகள் பிரச்னை, பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் சோனியா பேசியதாவது: வேளாண் சட்டங்களை எதிர்த்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால், போராட்டம் குறித்து எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் அகங்காரத்துடன் நடந்துகொள்ளும் மத்திய அரசின் செயல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

வேளாண் சட்டங்கள் குறித்து தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்து வருகிறது. வேளாண் சட்டங்கள் உணவுப் பாதுகாப்பை அழித்துவிடும். குறைந்தபட்ச ஆதார விலை, பொதுக்கொள்முதல், ரேஷன் முறை ஆகிய 3 தூண்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும் என்பதால், நாம் தொடக்கத்தில் இருந்தே புறக்கணித்தோம். பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமாக விவாதிக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன. பேசவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், மத்திய அரசு அந்த விவகாரங்களை விவாதிக்கவிடுமா, அனுமதியளிக்குமா என்பதுதான் பிரச்சினை.

கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும். முழுமையாக முடிக்கப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரச் சூழல் பெரும்பாலான இடங்களில் பாதிப்புடனே இருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் பாதிப்பு இன்னும் குறையவில்லை. அமைப்பு சாரா தொழில்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE