கூடலுார்: முதுமலையில் காட்டு யானையின் காதில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இருவரை, வனத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனப்பகுதியில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக காட்டு யானை சுற்றி வந்தது. வனத்துறையினர் பழத்தில் மாத்திரை வைத்து, உட்கொள்ள செய்து, யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த, 18ம் தேதி காது அறுந்த நிலையில், அந்த யானை சிங்காரா அருகே சுற்றி வந்தது. காதில் இருந்து அதிக ரத்தம் வெளியானது. 19ம் தேதி, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர். லாரியில் ஏற்றி தெப்பக்காடு யானைகள் முகாம் செல்லும் வழியில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. அதன் காதில் தீக்காயங்கள் ஏற்படுத்தியவர்கள் குறித்து, வனத்துறை தனிக்குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், யானைக்கு தீ வைத்தது தொடர்பான வீடியோ, நேற்று சமூக வலை தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், யானையை சிலர் பெட்ரோல் ஊற்றிய தீப்பந்தத்தை வீசி விரட்டியதும், காது, கழுத்து பகுதியில் எரியும் தீயுடன் யானை அலறி ஓடுவதும் பதிவாகியுள்ளது. இதை வைத்து, விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், மாவனல்லா தனியார் விடுதி உரிமையாளர் மல்லன் மகன், ரேமண்ட்,28, மசினகுடியை சேர்ந்த பிரசாத்,36, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ரிக்கிராயன், 31, என்பவரை தேடி வருகின்றனர்.

'கடும் நடவடிக்கை'
பொதுமக்கள் கூறுகையில்,'பொக்காபுரம், மாவனல்லா பகுதிகள் ஏற்கனவே, யானைகள் வழித்தடமாக உள்ளன. இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், காட்டேஜ்களையும் அகற்ற, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. யானை உள்ளிட்ட விலங்குகளை, சிறிதும் இரக்கமின்றி துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ''மாவனல்லா அருகே உள்ள தனியார் விடுதியில் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இருவரை கைது செய்துள்ளோம்; ஒருவரை தேடி வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
விடுதிக்கு 'சீல்'

ஊட்டி தாசில்தார் குப்புராஜ் கூறுகையில்,'' மசினகுடி மாவனல்லா பகுதியில், யானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக, தனியார் விடுதிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE