காங்., காரிய கமிட்டி கூட்டத்தில் காரசாரம்; புதிய தலைவர் தேர்வு தாமதமாகிறது| Dinamalar

காங்., காரிய கமிட்டி கூட்டத்தில் காரசாரம்; புதிய தலைவர் தேர்வு தாமதமாகிறது

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (22)
Share
டில்லியில் நேற்று(ஜன.,22) நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், மூத்த நிர்வாகிகளுக்கு இடையே காரசாரமான விவாதம் நடந்தது. இதில், தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின், கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யலாம் என, முடிவெடுக்கப்பட்டது. காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென, பல மாதங்களாக, மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Congress, CWC, Congress Working Committee, Sonia, Sonia Gandhi, காங்ங்கிரஸ், காரிய கமிட்டி கூட்டம்,காரசாரம், புதிய தலைவர், தேர்வு தாமதமாகிறது

டில்லியில் நேற்று(ஜன.,22) நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், மூத்த நிர்வாகிகளுக்கு இடையே காரசாரமான விவாதம் நடந்தது. இதில், தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின், கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யலாம் என, முடிவெடுக்கப்பட்டது.

காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென, பல மாதங்களாக, மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், டில்லியில் நேற்று, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. தற்காலிக தலைவரான சோனியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தலைமைக்கு எதிராக ஏற்கனவே போர்க்கொடி துாக்கிய மூத்த தலைவர்கள் மற்றும் ராகுல் ஆதரவாளர்கள் என, நிர்வாகிகள் இரு பிரிவுகளாக பிரிந்து, காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர்.


கடும் வாக்குவாதம்


குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், சிதம்பரம் உள்ளிட்ட சிலர் பேசும்போது, 'அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கட்சியின் எதிர்கால செயல்திட்டம் என்ன' என வெளிப்படையாகவே தலைமையை நோக்கி கேள்விகளை எழுப்பினர். கட்சியின் அமைப்பு தேர்தல்களின் நிலை குறித்தும், புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்தும், தொடர்ந்து தர்மசங்கடமான கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராகுலின் ஆதரவு நிர்வாகிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்தோணி, உம்மன் சாண்டி, தாரிக் அன்வர் போன்றவர்கள், 'புதிய தலைவர் தேர்வை, இப்போது நடத்துவது சரியாக இருக்காது; அது, ஐந்து மாநில சட்ட சபை தேர்தல் பணிகளை பாதிக்க கூடும். 'தேர்தல் முடிவுகள் வந்தபின், புதிய தலைவரை தேர்வு செய்யலாம்' என, வாதிட்டனர்.பரபரப்பான வாக்குவாதத்துக்கு மத்தியில், ராகுலும், ''தேர்தல் பணிகளை முடித்த பின், கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யலாம்,'' என, யோசனை தெரிவித்தார். ஆலோசனையின் இறுதியில், ராகுல் ஆதரவாளர்களின் கையே ஓங்கியது. இதன்படி, 'தற்போதைக்கு சட்டசபை தேர்தல்களுக்கு முன்னுரிமை அளிப்பதே சரியாக இருக்கும்' என்ற கருத்து இறுதி வடிவம் பெற்றது.


பரிந்துரை


புதிய தலைவர் தேர்வு மற்றும் அதற்கான காரிய கமிட்டி கூட்டம் நடத்தும் தேதிகளை, உரிய முறையில் ஆலோசித்து, இடைக்கால தலைவர் சோனியாவே, விரைவில் அறிவிப்பார் என்றும், தீர்மானிக்கப்பட்டது.இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர், கே.சி.வேணுகோபால் கூறுகையில், ''ஜூன் இறுதிக்குள், கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் முடிவு செய்து உள்ளது,'' என்றார்.

இந்நிலையில், தலைவர் தேர்வுக்காக, மே 29ல், அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை நடத்தலாம் என, கட்சியின் தேர்தல் பிரிவு தலைவரான மதுசுதன் மிஸ்ரியும் பரிந்துரைத்துள்ளார். நேற்று நடந்த கூட்டத்தில், காங்., தலைவர் சோனியா பேசியதாவது:

பார்லிமென்டில் போதிய விவாதங்கள் நடத்தாமல், புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியதே, விவசாயிகள் போராட்டத்துக்கு காரணம். துவக்கத்திலிருந்தே, இந்த சட்டங்களை காங்கிரஸ் நிராகரித்து வந்தது. நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில், ராணுவ ரகசியங்கள் வெளியாகியிருப்பது, அதிர்ச்சியாக உள்ளது.


பலவீனம்


இந்த விஷயத்தில், மத்திய அரசு அமைதி காக்கிறது. தேசபக்தி குறித்து, அடிக்கடி சான்றிதழ் வழங்குபவர்கள், தற்போது அம்பலமாகியுள்ளனர்.தொழிலாளர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சட்டங்களை, மத்திய அரசு பலவீனப்படுத்திவிட்டது. பொதுச் சொத்துக்களை தனியாருக்கு விற்பதும் அதிகரித்துஉள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.


மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்


காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், சோனியா தலைமையில் நேற்று நடந்தது. அதில், 'ரிபப்ளிக் டிவி' தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின், 'வாட்ஸ் ஆப்' தகவல்கள், விவசாயிகள் போராட்டம், தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்து, மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விபரம்: அர்னாப் கோஸ்வாமி பகிர்ந்துள்ள, 'வாட்ஸ் ஆப்' தகவல்களை பார்க்கும் போது, தேசிய பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது. மத்திய அரசாங்கத்தில் உயர் பதவி யில் இருப்பவர்களே, அர்னாப்புடன் இந்த தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ ரகசியங்கள் வெளியே கசிய விடப்பட்டுள்ளன. அரசாங்க ரகசியங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே சட்டத்தை மீறியுள்ளனர். இதில் தொடர்புடையவர்களை கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்று தரவேண்டும்.

இது தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைத்து, கால அவகாசம் நிர்ணயித்து, அதற்குள் விசாரணையை முடிக்க வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்கள், மாநில அரசுகளின், அரசியலமைப்பு உரிமைகளை பறிப்பதாக உள்ளன. பல ஆண்டுகளில் படிப்படியாக உருவாக்கப்பட்ட, உணவுப் பாதுகாப்பின் மூன்று துாண்களான, குறைந்தபட்ச ஆதரவு விலை, பொது கொள்முதல், பொது வினியோகம் ஆகியவற்றை சிதைக்கிறது.

கொரோனா தடுப்பூசி போட, முன்னணி சுகாதார நிபுணர்கள் இடையே உள்ள தயக்கத்தை போக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், இலவசமாக தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X