புதுடில்லி: புதிய வேளாண் சட்டங்களை, ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து, கூட்டு கமிட்டியின் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, மத்திய அரசு முன்வைத்த பரிந்துரையை ஏற்க, விவசாய சங்க பிரதிநிதிகள் மறுத்தனர்.இதையடுத்து, அடுத்த சுற்று பேச்சுக்கான தேதி கூட குறிப்பிடப்படாமல், இரு தரப்பு பேச்சில் முட்டுக்கட்டை விழுந்து உள்ளது.
போராட்டம்
மத்திய அரசு அமல்படுத்திய, மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர், டில்லியில், 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.புதிய சட்டங்களை அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. பிரச்னையை சுமுகமாக பேசி தீர்க்க, நான்கு பேர் அடங்கிய குழுவையும் அமைத்தது. இதற்கிடையே, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், மத்திய அமைச்சர்கள் பல்வேறு சுற்று பேச்சு நடத்தினர்.
'புதிய சட்டங்களை முழுவதுமாக திரும்ப பெற வேண்டும்' என்ற கோரிக்கையில் இருந்து பின் வாங்க, விவசாய சங்கத்தினர் மறுப்பதை அடுத்து, முடிவு எட்டப்படாமல் பேச்சு தொடர்கிறது. இந்நிலையில், 10ம் சுற்று பேச்சு சமீபத்தில் நடந்தது. அப்போது, புதிய வேளாண் சட்டங்களை, ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைத்துவிட்டு, இரு தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுக் குழு உருவாக்கி, பேச்சு வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காணும் பரிந்துரையை, மத்திய அரசு முன் வைத்தது.
பிடிவாதம்
இது குறித்து விவாதித்து முடிவு சொல்வதாக, விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்நிலையில், 11ம் சுற்று பேச்சு நேற்று நடந்தது.அப்போது, மத்திய அரசு முன் வைத்த பரிந்துரையை ஏற்க, விவசாய சங்கத்தினர் மறுத்தனர். புதிய சட்டங்களை முழுவதுமாக திரும்ப பெறும் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தனர்.
இதையடுத்து, தீர்வு எட்டப்படாமலேயே பேச்சு முடிவுக்கு வந்தது. வழக்கமாக, பேச்சு முடிவின் போது, அடுத்த சுற்றுக்கான தேதியை மத்திய அரசு தெரிவிக்கும்.இம்முறை, அடுத்த சுற்றுக்கான தேதியை அறிவிக்காமல், மத்திய அரசு கூட்டத்தை முடித்தது. இதையடுத்து, விவசாயிகளுடனான பேச்சில் முட்டுக்கட்டை விழுந்து உள்ளது.'திட்டமிட்டபடி, குடியரசு தினத்தன்று, டிராக்டர் பேரணி நடக்கும். பேரணியை அமைதியாக நடத்தும் பொறுப்பை, போலீசார் ஏற்கவேண்டும்' என, விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ''விவசாய சட்டங்கள் விஷயத்தில், சிலர் சுயநலத்துடன் பிடிவாதமாக செயல்படுவதால், பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE