வாஷிங்டன்: டிரம்ப் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக மேஜையில் ஒரு சிகப்பு பட்டனை பொருத்தியிருந்தார். பார்வையாளர்களிடம் அது அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்யும் பட்டன் என்று கூறி பீதியை கிளப்புவார். அதனை பைடன் நீக்கியுள்ளார்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த புதனன்று பதவிவேற்றார். டிரம்ப் செயல்படுத்தி வந்த பல்வேறு திட்டங்களை இவர் கைவிட்டு வருகிறார். அதில் ஒரு சுவாரஷ்யமான விஷயத்தை அமெரிக்க ஊடகவியலாளர் டாம் நியூட்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் அமரும் பிரம்மாண்டமான ரெசல்யூட் மேஜை உள்ளது. பாரம்பரியமான அந்த மேஜையில் டிரம்ப் ஒரு சிறிய சிகப்பு பட்டனை பொருத்தியிருந்தார். அதனை தற்போது அதிபர் பைடன் நீக்கி உள்ளதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.
அது டயட் கோக் பெறுவதற்கான பட்டன் என்று அவர் தெரிவித்துள்ளார். டைம்ஸ் ரேடியோவில் தலைமை அரசியல் விமர்சகராக இருக்கும் டாம் நியூட்டனும், சன்டே டைம்ஸில் அரசியல் பிரிவு ஆசிரியராக இருக்கும் டிம் ஷிப்மேன் என்பவரும் 2019-ல் டிரம்பை பேட்டி எடுக்கச் சென்ற போது அந்த சிறிய சிகப்பு நிற பட்டனை ஆச்சரியமாக பார்த்துள்ளனர். அப்போது டிரம்ப் அந்த பட்டனை அழுத்தியுள்ளார். உடனே பணியாள் ஒருவர் வெள்ளி தட்டில் டயட் கோக் கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.டிரம்ப் ஒரு சோடா பிரியர் ஆவார். தினசரி 12 கேன் டயட் கோக் அருந்துவார் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

க்ளிஃப் சிம்ஸ் என்ற வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர், 'டீம் ஆப் வைப்பர்ஸ்' என்ற சுயசரிதை எழுதியுள்ளார். அதில், இந்த சிகப்பு பட்டனை வைத்து தன்னை பார்க்க வருபவர்களை எப்படி எல்லாம் டிரம்ப் ஏமாற்றுவார் என்று விவரித்துள்ளார்.
“இது அணு ஆயுதங்களை இயக்கச் செய்யும் பட்டன் என்று அவர்களிடம் கூறிவிட்டு உடனே அழுத்திவிடுவார். வந்திருக்கும் விருந்தினர்கள் மிரட்சியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பார்கள். அப்போது ஒரு பணியாள் வெள்ளித்தட்டில் டயட் கோக் நிரப்பிய கண்ணாடி கோப்பையை கொண்டு வருவார். டிரம்ப் வெடித்துச் சிரிப்பார்.” என குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE