புதுடில்லி: 'சோதனை முயற்சியாக, ஸ்டெர்லைட் ஆலையை மூன்று மாதங்களுக்கு திறக்க அனுமதிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
'வேதாந்தா குரூப்' நிறுவனம் சார்பில், தமிழகத்தின் துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை துவங்கப்பட்டு இயங்கி வந்தது. தள்ளுபடி'ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையால், பொது மக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது; சுற்றுச்சூழல் மாசுபடுகிறது; நிலத்தடி நீரில் பாதிப்பை ஏற்படுத்துகிறது' என, புகார்கள் எழுந்தன. ஆலையை மூடக்கோரிய போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாயினர்.
இதையடுத்து, ஆலையை மூடி, 'சீல்' வைக்க, 2018 மே, 28ல், தமிழக அரசு உத்தரவிட்டது. மூடப் பட்ட ஆலையை திறக்கக் கோரி, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதி அளிக்க வேண்டும்' என, வேதாந்தா நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து, விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்ஹா, ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது.
நிபந்தனை
அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ''ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும், நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது. ''அதனால், ஆலையை சோதனை முயற்சியாக மூன்று மாதங்களுக்கு திறக்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், 'ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க முடியாது. மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைவில் நடத்த வேண்டும் என்பதையும், ஏற்க முடியாது' என, உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE