பொது செய்தி

தமிழ்நாடு

வங்கத்துச் சிங்கத்தை போற்றுவோம்!

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆயுதம் ஏந்தி, இந்நாட்டின் விடுதலைக்காக போராடியவர்; பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், சுபாஷ் சந்திர போஸ். இன்றைய ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில், புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த ஜானகிநாத் போஸ், பிரபாவதி தம்பதியின் ஒன்பதாவது குழந்தையாக, 1897ம் ஆண்டு பிறந்தார். இளம்வயதில், தன் மானசீக குருவாக, சுவாமி விவேகானந்தரையே ஏற்றார். தந்தையின் விருப்பப்படி, கேம்பிரிட்ஜ்
வங்கத்து சிங்கம், நேதாஜி, சுபாஷ்சந்திர போஸ், சண்முகநாதன்

ஆயுதம் ஏந்தி, இந்நாட்டின் விடுதலைக்காக போராடியவர்; பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், சுபாஷ் சந்திர போஸ். இன்றைய ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில், புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த ஜானகிநாத் போஸ், பிரபாவதி தம்பதியின் ஒன்பதாவது குழந்தையாக, 1897ம் ஆண்டு பிறந்தார். இளம்வயதில், தன் மானசீக குருவாக, சுவாமி விவேகானந்தரையே ஏற்றார். தந்தையின் விருப்பப்படி, கேம்பிரிட்ஜ் பல்கலையில், ஐ.சி.எஸ்., படிக்க, 1919 செப்., 19ல், இங்கிலாந்திற்கு சென்றார்.இங்கிலாந்தில் அமைந்திருந்த, இந்தியர் சங்கம் நடத்திய கூட்டங்களில் ஆர்வமாக பங்கேற்றார். அதில் பேசிய பாலகங்காதர திலகர், சரோஜினி நாயுடு போன்றோரின் உரைகள், அவரை பெரிதும் கவர்ந்தன.இதற்கிடையில், ஐ.சி.எஸ்., தேர்வில் நான்காவது இடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.


பட்டம் துறப்பு


இந்த காலக்கட்டத்தில் தாய்நாட்டில், ரவுலட் சட்டத்தை எதிர்த்து கிளர்ச்சி எழுந்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து, 1919 ஏப்., 13ல், பஞ்சாபின் அமிர்தரசில் ஜாலியன் வாலாபாகில் அமைதியாக கூடிய, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை, ஜெனரல் டயர் என்பவன் சுற்றி வளைத்து துப்பாக்கியாலும், பீரங்கிகளாலும் சுட்டு வீழ்த்தினான்.இந்தப் படுபயங்கரமான பாதகச் செயலைக் கேள்விப்பட்ட நேதாஜியின் மனம் துடித்தது.

அந்த நேரத்தில், தன் குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதினார்.'நான், ஐ.சி.எஸ்., பட்டம் பெற்று, இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் கீழ் கலெக்டராகப் பணியாற்றலாம். அதன் மூலம் வசதியான வாழ்க்கை நடத்தலாம் என்று நினைத்தால், அது என் ஆன்மாவையே பலி கொடுப்பதற்குச் சமமானதாகக் கருதுகிறேன். ஐ.சி.எஸ்., பதவியை ஏற்றுக் கொண்டால், பிரிட்டிஷ் அரசிற்கு, நான் கட்டுப்பட்டு நடப்பேன் என்று தான் அர்த்தம். நம் சொந்த வீட்டிற்கு உழைப்பதைவிட, தாய்நாட்டிற்கு என்னைத் தியாகம் செய்து கொள்வதையே விரும்புகிறேன்' என, கடிதத்தில் தெரிவித்தார். அதன்படி, தான் பெற்ற, ஐ.சி.எஸ்., பட்டத்தை பல்கலையில் திருப்பிக் கொடுத்து, இந்தியா திரும்பினார்.


அரசியல் களம்


காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். 1924ல், ஆங்கிலேய அரசு, இவரைக் கைது செய்து, மியான்மரில் சிறை வைத்தது. காந்தியின் முயற்சியால், அவர் விடுதலை பெற்றார்.சுபாஷ் சந்திரபோஸ், வெள்ளையரைப் போரிட்டு வெளியேற்ற வேண்டுமேயல்லாது, அமைதி முறையில் விடுதலையை அடைய முடியாதென்று எண்ணினார்.அவ்வகையில் காந்தி கொள்கைகளிலிருந்து மாறுபட்டிருந்தார். 1938ல், காங்கிரஸ் தலைவரானார். எனினும் கருத்து வேற்றுமை காரணமாகப் பதவி விலகி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை துவக்கினார். அதன் தமிழகத் தலைவராக, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பதவி ஏற்றார்.

1939-ல் மதுரைக்கு வருகை புரிந்த நேதாஜி, மேடையில் பேசும்போது, 'நான் மீண்டும் பிறந்தால், தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்' என்று முழங்கினார்.கோல்கட்டாவில், ஹால்வெல் எனும் வெள்ளையன் சிலையை அகற்ற, இயக்கம் கண்டதால், வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இரண்டாம் உலகப்போர்


கடந்த, 1939-ல் ஹிட்லர் போலந்தின் மீது தொடங்கிய போர், இரண்டாம் உலகப் போராக உருவெடுத்தது. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா ஓரணியாகவும்; ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஓரணியாகவும் மோதும் நிலை நேரிட்டது.போரில், இங்கிலாந்து தோல்விக் கண்டு வந்தது. அவ்வேளையில், ஆங்கிலேயரைப் படைகொண்டு தாக்கினால், இந்தியா விடுதலை பெறுவது சுலபம் என்று நம்பினார் போஸ்.இதனால், 1941 ஜனவரியில் மாறுவேடம் பூண்டு வீட்டிலிருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் வழியாக, ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு சுதந்திர இந்திய மையம் அமைத்தார். 'ஆசாத் ஹிந்த்' என்ற வானொலி சேவையையும் உருவாக்கினார். கிழக்காசியாவில் போர் தீவிரம் அடைந்தது.

இந்நிலையில் போஸ் துணிவுடன், ஒரு நீர்மூழ்கிக் கப்பலில், 90 நாட்கள் கடலுக்குள்ளேயே பயணம் செய்தார். 1943 ஜூன், 20-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்தடைந்தார். இந்திய விடுதலைக்கு உதவிட, ஜப்பான் உறுதியளித்தது. ஜூலை, 2ம் தேதி, சிங்கப்பூருக்கு சென்றார்.


இந்திய தேசிய ராணுவம்


சிங்கப்பூரில் ராஷ்பிகாரி, போஸ் உடன் சேர்ந்து, இந்திய தேசிய ராணுவம் அமைத்தார். 'ஜெய் ஹிந்த்' என்ற தாரக மந்திரத்தை அளித்தார்.தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, 30 லட்சம் இந்தியரும், சுபாஷைத் தங்கள் தனிப் பெருந்தலைவராக ஏற்றனர். 'எனக்கு ரத்தத்தைக் கொடு; நான், உனக்கு சுதந்திரம் தருகிறேன்' என்று அழைப்பு விடுத்தார், நேதாஜி.சுதந்திர இந்திய அரசுஅதே ஆண்டு, அக்., 21ம் தேதி, சுயராஜ்ய பிரகடனம் செய்தார். இதற்கு ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. போர்ப்படையில் இணைந்த பெண்கள் அணிக்கு, 'ஜான்ஸி படை' என, நேதாஜி பெயர் சூட்டினார்.

பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரை வென்ற ஜப்பான், அங்கு சுதந்திர அரசை அமைத்துத் தந்தது. இதனால், 1944 ஜனவரியில், இந்திய சுதந்திர அரசை, சிங்கப்பூரிலிருந்து மியான்மருக்கு இடம் மாற்றினார், நேதாஜி.இந்திய தேசியப்படை போரில் களமிறங்கியது. மியான்மர் எல்லையைக் கடந்த படை, இந்திய மண்ணை மிதித்தது. தொடர்ந்து பல இடங்களை வென்ற படையினர், மணிப்பூருக்குள் நுழைந்து, அதன் முக்கிய நகரமான, இம்பாலை வெற்றிக் கொள்ள முயன்றது.


அணுகுண்டு தாக்குதல்


இத்தருணத்தில், இரண்டாம் உலகப்போரின் நிலை மாறியது. ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் தோல்வியை நோக்கி சென்றன.ஆங்கிலேய படையும், மியான்மர் நாட்டிற்குள் நுழைந்தது. விடுதலை அரசின் தலைமையகமும், ரங்கூனிலிருந்து பாங்காக்குக்கு மாற்றப்பட்டது. போரில் இறந்த வீரர்களுக்கு, நினைவுச் சின்னத்திற்கான அடிக்கல்லை, சிங்கப்பூர் கடற்கரையில் நேதாஜி நாட்டினார்.ஜப்பான் மீது, அமெரிக்கா அணுகுண்டு வீசியதைத் தொடர்ந்து, 1945 ஆக., 14-ம் தேதி ஜப்பான் தோல்விக் கண்டு, நேச நாடுகளிடம் சரணாகதி அடைந்தது.


வீர மரணம்


இதையடுத்து நேதாஜி, 1945 ஆக., 16ல் ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்துவதற்காக விமானத்தில் புறப்பட்டார். செல்லும் வழியில், பார்மோசா தீவில் விமானம் விபத்துக்குள்ளாகியது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நேதாஜி, அங்கு உயிரிழந்தார்.நேதாஜியின் மரணம் பற்றி, ஐயம் எழுந்ததால், இந்திய அரசு நியமித்த குழு, டோக்கியோ சென்று விரிவாக ஆராய்ந்து, அவர் இறப்பை உறுதிப்படுத்தியது; ஆயினும் அவர் இறக்கவில்லை என்று கூறுவோரும் உள்ளனர்.நேதாஜியின் சடலம் சிதையில் ஏற்றப்பட்டதை, தம் கண்ணால் கண்டதாக, கர்னல் ஹபிபுர் ரஹ்மான் உறுதியாக உரைத்தார்.


பராக்கிரம தினம்


தாய்த்திரு நாட்டிற்கு செய்யும் சேவையே, தெய்வத்திற்கு செய்யும் சேவை என்று வாழ்ந்த ஒரு மாவீரன் வாழ்க்கை நிறைவுற்றது.சுதந்திர இந்தியாவில் நேதாஜியின் உருவப்படம் பொறித்த தபால்தலை வெளியிடப்பட்டது. பார்லிமென்டில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. 1992ல், 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீரத்தை, தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில், அவரது பிறந்த நாளான, ஜன., 23ம் தேதியை, 'பராக்கிரம தினம்' என, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது, மிக சரியானதே!ஜெய் ஹிந்த்!

வி. சண்முகநாதன்,

முன்னாள் ஆளுநர்.

தொடர்புக்கு : vsnathan7666@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Bengalooru,இந்தியா
23-ஜன-202112:22:51 IST Report Abuse
Krish நேதாஜி அவர்களை 'தேசத்தையும் ,காங்கிரசையும் வழி நடத்தவிடாமல் தடுத்தனர் அன்றைய காங்கிரஸ் தலைவ பெருமக்கள் ,இதில் காந்தியும் உள்பட்டவர் .அதேபோன்று இன்று காங்கிரசில் பலதிறமையான, அறிவுத்திறன் படைத்த ,அனுபமிக்க பல லேடீர்கள் உள்ளனர் . ஆனால் கட்சி தலைமையோ ' தன வாரிசுக்காகவே போராடுகிறது. காங்கிரஸ் லீடர்களே விழித்து எழுங்கள் , வாரிசு அரசியலை விரட்டி 'உங்கள் தகுதியான லீடரை நீங்கள் தேர்வு செய்யுங்கள் , காங்கிரசை காப்பாற்றுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X