புனே: மஹாராஷ்டிராவில், 'சீரம் இந்தியா' நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில், கொரோனா வைரசுக்கான, 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்தை தயாரித்து, வினியோகிக்கும் பணியை, சீரம் இந்தியா நிறுவனம் செய்து வருகிறது. மஹாராஷ்டிராவின் புனேவில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில், நேற்று முன்தினம், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி, ஒப்பந்த தொழிலாளர்கள் ஐந்து பேர், பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து நடந்த சீரம் நிறுவனத்திற்கு, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:இந்த தீ விபத்து குறித்து விசாரணை துவங்கி உள்ளது. இது விபத்தா அல்லது சதிவேலையா என்பது, விசாரணை முடிவில் தெரிந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து, சீரம் நிறுவன தலைவர் அதர் பூனவல்லா கூறியதாவது:ஏராளமான பொருட்களும், உபகரணங்களும் தீயில் கருகி சேதமடைந்தன. இதனால், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, தடுப்பூசி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில், இந்த விபத்து ஏற்படவில்லை. தடுப்பூசி வினியோகம் இதனால் பாதிக்கப்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE