பெங்களூரு: கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள, ஜெ., தோழி சசிகலா, 66, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் முடிவடைந்து, வரும், 27ல், அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக, சிறை நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது.இரண்டு நாட்களுக்கு முன், சிறையில், சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள, பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், உயர் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாற்றப் பட்டார்.அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால், தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை, சிறை கைதிகள் சிகிச்சை பிரிவிலிருந்து, கொரோனா சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது.இது குறித்து, மருத்துவ குழு தலைவர் ரமேஷ் கிருஷ்ணா கூறுகையில், ''மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால், ஆக்சிஜன் உதவியுடன் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஐந்து முதல், ஏழு நாட்கள் வரை சிகிச்சை தேவைப்படும். சிகிச்சையில் அவருக்கு முன்னேற்றம் காணப்படுகிறது,'' என்றார்.இதற்கிடையில், அ.ம.மு.க., செய்தி தொடர்பாளர், நடிகை சரஸ்வதி, வழக்கறிஞர்கள் அசோகன், செந்துார் பாண்டியன் உட்பட சிலர் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிப்பால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி, சசிகலாவின் உறவினர்கள், சிறை நிர்வாகத்திடம் கோரினர்.
சசிகலாவுடன் தொடர்பில் இருந்த அவரின் உறவினர் இளவரசி, போலீசார், சிறை ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.திட்டமிட்டபடி வரும், 27ல் சசிகலா விடுதலையானாலும், கொரோனா தொற்று குணமடைந்தால் மட்டுமே, அவர் சென்னை திரும்புவார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE