புதுடில்லி: ரயில்களில், 'ஆன்லைன்' வாயிலாக பயணியர் கேட்கும் உணவுகளை நேரடி வினியோகம் செய்யும் சேவை, அடுத்த மாதத்திலிருந்து மீண்டும் துவங்கவுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் -சுற்றுலா கழகம் சார்பில், பயணியர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் உணவுகளை, அடுத்து வரும் ரயில்வே ஸ்டேஷனில் நேரடியாக வழங்கும், 'இ - கேட்டரிங்' சேவை, 2014ல் துவங்கப்பட்டது.இதற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்ததுடன், தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 'மொபைல் போன்' வாயிலாக உணவுகளை முன்பதிவு செய்து பெற்றனர். கொரோனா பாதிப்பால், கடந்த மார்ச், 22 முதல், இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால், தற்போது இயங்கும் சிறப்பு ரயில்களில், முன்னதாக தயாரித்து, 'பேக்' செய்யப்பட்ட உணவுகள் மட்டுமே பயணியருக்கு வழங்கப்படுகின்றன; இதற்கு போதிய வரவேற்பு இல்லை.இதையடுத்து, பயணியர் நலனை கருத்தில் வைத்து, மீண்டும், இ - கேட்டரிங் சேவையை துவங்க, இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, 30 ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாகச் செல்லும், 250 ரயில்களின் பயணியருக்கு, இந்த சேவை அளிக்கப்பட உள்ளது.'இ - கேட்டரிங் சேவை அடுத்த மாதம் துவங்கும்' என, இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் நேற்று அறிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE