திருப்பூர்: கோவை, திருப்பூரில் காங்., எம்.பி., ராகுல் இன்று(ஜன.,23) பிரசாரம் மேற்கொள்கிறார். ராகுல் வருகையை தொடர்ந்து, திருப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காங்., முன்னாள் தலைவர் ராகுல், தமிழகத்தில், மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று கோவை மற்றும் திருப்பூரிலும், நாளை ஈரோடு மாவட்டத்திலும் பிரசாரம் செய்கிறார். கோவையில் தொழில் துறையினர், திருப்பூரில் தொழிலாளர்கள், ஈரோட்டில் நெசவாளர்கள் மத்தியில் கலந்துரையாடுகிறார். அவரது வழித்தடம், கூட்ட அரங்கம், தங்குமிடங்களில், மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சி.ஆர்.பி.எப்., துணை கமாண்டன்ட் கணேஷ் பிரதாப்சிங், மத்திய நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி., ஹரிசர் ஆண்டனி மற்றும் 16 பேர் குழு, திருப்பூர் திருமண மண்டபத்தில் நேற்று ஆய்வு செய்தனர். ராகுல் மேடைக்கு வரும் வழி, பேசவுள்ள இடம், தொழிலாளர்களை சந்திக்கும் இடம், இரவு தங்குமிடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு, ஆலோசித்தனர்.
கோவையில் பழனிசாமி:
இதற்கிடையில், கோவை மாவட்டம் முழுதும், இன்றும், நாளையும், 23 இடங்களில், வேனில் நின்றபடி, மக்களிடம் முதல்வர் பழனிசாமி, ஆதரவு திரட்டுகிறார். இன்று காலை, 7:10 மணிக்கு, கோனியம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின், பிரசாரம் துவக்குகிறார். மாலை, 5:05 மணிக்கு மாசாணியம்மன் கோவிலில் தரிசனம் செய்து, தொடர் பிரசாரத்தை முடித்து, கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், இரவு தங்குகிறார்.
நாளை காலை முதல் இரவு வரை, 11 இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரு நாட்களில், 23 இடங்களில் முதல்வர் பேசுகிறார். தொடர்ந்து, சேலம் செல்கிறார். ராகுல், முதல்வர் இ.பி.எஸ்., கோவையில் பிரசாரம் செய்வதை முன்னிட்டு, 5,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE