தேர்தல் அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையிலும், வருங்காலங்களில், சமூக பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். ஹிந்துத்துவா சக்திகளுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளேன்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
'முதலில், தனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி தானா; கொள்கையில் மாற்றம் வேண்டுமா; புது கொள்கைகளை பிடிப்போமா என யோசியுங்கள்; அதன் பின் செயல்படுங்கள்...' என, கூறத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.
லோக்சபா தேர்தலின்போது, ஸ்டாலின் கூறிய பொய் வாக்குறுதியை நிறைவேற்ற, தமிழகத்தின் கஜானா மட்டுமல்ல; இந்தியாவின் கஜானா மட்டுமல்ல; அமெரிக்காவின் கஜானாவும் போதாது. அவரை போல் யாருமே பொய் பேச முடியாது. அவர் தான் இப்போது, அமைச்சர்கள் மீது, பொய்யான ஊழல் புகாரை கூறுகிறார்; நேரில் விவாதிக்க அழைத்தால், ஓடி ஒளிந்து கொள்கிறார்.
- அமைச்சர் வேலுமணி
'பொய்யான புகார் என நீங்கள் கூறினாலும், அதை பொய் என கூற வேண்டியது கோர்ட் தானே...' என, நினைவூட்டும் வகையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பேச்சு.
திராவிடக் கட்சிகள், ஜன., 24ஐ, வீரவணக்க நாளாக கடைப்பிடித்து, அந்த காலத்தில் ஹிந்திக்கு எதிராக போராடியவர்களை பாராட்டி வருகிறது; அது தவறு. அந்த நாளை, ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து தினமாக கடைப்பிடிக்கும்.
- ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்

'இன்னும் பழைய விவகாரங்களை எழுப்பியே, அக்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன என்பது, நீங்கள் சொல்வதன் மூலம் தெரிய வருகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.
மதசார்பின்மைக்கு ஆதரவாக, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல் பேசி வருகிறார். தனியாளாக அவர் பேசினால், குரல் கேட்காது. அதனால் அவர், காங்கிரசுக்கு வர வேண்டும். மதசார்பின்மையை வலியுறுத்தி தான், காங்., கட்சி செயல்படுகிறது.
- தமிழக காங்., தலைவர் அழகிரி
'தனியாளாக கமல், தமிழகம் முழுக்க பிரசாரம் செய்து வருகிறார். ஏராளமான சொத்து, ஆள், அம்பு வைத்துள்ள காங்., அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப்பணியாளர்கள், நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களும், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில், எவ்வித கட்டணமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
- அமைச்சர் விஜயபாஸ்கர்
'கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பில், தமிழக அரசு தடம் புரளாமல், 'ஸ்டெடி'யாக செல்கிறது...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE