
பெட்ரோலில் நனைத்த சாக்கில் நெருப்பு வைத்துஅதை யானை மீது எறிந்ததன் காரணமாகவே ஒரு காட்டு யானை அநியாயமாக இறந்துள்ளது.
நீலகரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனப்பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று கடுமையான தீக்காயங்களுடன் சுற்றி வந்தது.

வனத்துறையினர் போய்ப் பார்த்த போது யானை மிகவும் சோர்வாக இருந்தது அதன் காது அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது புண்கள் பெரிதாகி இருந்தது உடம்பெங்கும் தீக்காயம் காணப்பட்டது.
யானையை சரணாலயத்திற்கு கொண்டு போய் சிகிச்சை கொடுப்போம் என வாகனத்தில் ஏற்றி கொண்டு போன போது வழியில் இறந்து போனது .
தங்கள் கண் எதிரே ஒரு யானை இறந்து போனதால் அதிர்ச்சியும் கவலையுமுற்ற வனத்துறையினர் யானையை அடக்கம் செய்தனர் அதன் தீ்க்காயத்தின் மர்மத்தை கண்டுபிடிக்க விசாரணை குழு அமைத்தனர்.
அந்த குழுவின் வேலையை சமூகவலைதளத்தில் பரவிய ஒரு வீடியோ மிகவும் எளிதாக்கியது.
ஒரு யானையை ஒரு சிலர் தீப்பிந்தம் காட்டி விரட்டுகின்றனர் ஒரு கட்டத்தில் திடீரென எரியும் சாக்கை துாக்கி யானையின் மீது வீசுகின்றனர் அது யானையின் மத்தளம் பகுதியில் போய் விழுந்து உடம்போடு ஒட்டிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிகிறது.தீநாக்குகளின் கோரப்பிடியில் சிக்கிய யானை பெரிதாக பீளிரிட்டு அலறியதுடன் செய்வதறியாது அங்குமிங்குமாக ஒடுகிறது.
யார் இதைச் செய்தது என விசாரித்த போது ‛மாவனல்லா' என்ற இடத்தில் விடுதி நடத்தியவர்கள்தான் இந்த கொடூரத்தை அரங்கேற்றம் செய்தவர்கள் என்பது தெரிகிறது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர் அவர்களை குண்டாஸ் ஆக்டில் உள்ளே போடவேண்டும் என்றெல்லாம் யானை ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.
தீப்பிடித்த நிலையில் ஒடிய யானை வேதனை தாங்காமல் அருகில் இருந்த தண்ணீர் குட்டையில் இறங்கி நீண்ட நேரம் இருந்திருக்கிறது தீப்புண்ணுக்கு தண்ணீர் மருந்தில்லையே இதன் காரணமாக புண்கள் மேலும் பெரிதாகி காது பகுதி அறுந்து விழும் நிலைக்கு உள்ளானது அது தந்த வேதனை வேறு பாவம் யானை எப்படியெல்லாம் துடிதுடித்ததோ.
வலியுடனும் சாப்பிட முடியாத வேதனையுடனும் வெளியில் வந்த யானையை காப்பாற்ற எடுக்கப்பட்ட கடைசி முயற்சியும் பலன்தரவில்லை .
மிருகமான மனிதர்களால் மீண்டும் ஒரு யானை கொல்லப்பட்டுவிட்டது
படம்,தகவல்:ஊட்டி ஆர்.ரகு.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE