கோல்கட்டா: இந்தியாவின் தைரியத்திற்கு அடையாள சின்னமாக நேதாஜி திகழ்கிறார் என கூறியுள்ள பிரதமர் மோடி,சுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி என தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்த நாள் விழா கோல்கட்டாவில் நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி, கவர்னர் ஜக்தீப் தங்கார், முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டனர். இந்த விழாவில் நேதாஜி நினைவு தபால் தலையை பிரதமர் வெளியிட்டார்.

பின்னர் மோடி பேசியதாவது: நேதாஜி எப்போதும் என்னை கவர்ந்தவர். நமக்கு முன்மாதிரியாக உள்ளார். அவரது வாழ்க்கை நமக்கு பாடம். இந்தியர்களின் சுதந்திரம் குறித்து நேதாஜி கனவு கண்டார். நாட்டின் தைரியத்திற்கு அடையாள சின்னமாக நேதாஜி உள்ளார். சுதந்திரத்தை திருடுவேன் என தைரியமாக கூறியவர்.சுதந்திர போராட்டத்திற்கு வலிமை சேர்த்தவர் நேதாஜி. அவர் நாட்டிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.சுதந்திர இந்தியாவிற்கு புது பாதை கொடுத்தவர் நேதாஜி
மே.வங்கத்தில் இருந்து தான் சமூக சீர்திருத்தங்கள் துவங்கின. மே.வங்கத்தின் கவுரவமாக விஞ்ஞானிகள் திகழ்கின்றனர். பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மே.வங்கத்தை சேர்ந்தவர். தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் மே.வங்கத்தில் இருந்துதான் இந்தியாவுக்கு கிடைத்தது. இன்றைய கோல்கட்டா பயணம் எனக்கு உணர்ச்சிப்பூர்வமானது. ஹவுரா- கல்கா இடையிலான ரயிலுக்கு நேதாஜி பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேதாஜியின் பெருமையை மறக்க விட மாட்டோம். இந்திய தேசிய ராணுவ முன்னாள் வீரர்களை கவுரவப்படுத்தியுள்ளோம். நேதாஜிக்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியா என்ற தனது கனவை நிறைவேற்ற பல கடுமையான முயற்சிகளை நேதாஜி மேற்கொண்டார்.
நமது நாடு தன்னிறைவு பெற அனைவரும் உழைக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் மட்டுமே வெற்றி பெற முடியும். தன்னிறைவு பெற்ற நாடு என்ற இலக்கு நம் முன் உள்ளது. நமக்கு தேவையான பொருட்கள், உள்நாட்டிலேயே தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். நம் மீது நாம் நம்பிக்கை வைத்தால், உலகில் எந்த சக்தியாலும் நம்மை வெல்ல முடியாது. புதிய இந்தியாவை கண்டு நேதாஜி பெருமைப்பட்டிருப்பார். நவீன தொழில்நுட்பங்களை இந்தியா ஏற்று கொண்டுள்ளது. கொரோனாவிற்கு எதிராக உலகளாவிய போராட்டத்திற்கு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்படுகின்றன. இந்தியாவின் சக்தியை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. இவ்வாறு பிரதமர் பேசினார்.
மம்தா மறுப்பு
இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி பேச வரும் போது ' ஜெய் ஸ்ரீராம் ' என்ற கோஷம் எழுந்தது. இதனால், கோபமடைந்த மம்தா, இது அரசியல் நிகழ்ச்சி அல்ல. அரசு நிகழ்ச்சி. அரசு நிகழ்ச்சியில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்துவிட்டு, அவரை அவமதிப்பது சரியல்ல எனக்கூறி பேச மறுத்துவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE